2025 ஜூலை 02, புதன்கிழமை

முஸ்லிம்கள் மத்தியிலும் பிரபாகரன்கள் உருவாகுவார்கள்: ஐங்கரநேசன்

Menaka Mookandi   / 2014 ஜூன் 20 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தமிழ் மக்கள் மீது காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்டுவந்த பேரினவாத ஒடுக்குமுறைகள் தான் பிரபாகரன் என்ற ஆளுமையின் தோற்றத்துக்குக் காரணமாக இருந்தது. அதேபோன்று, முஸ்லிம்கள் மீதான இனரீதியான ஒடுக்குமுறைகளும், அழிப்புகளும் தொடருமாக இருந்தால் முஸ்லிம்களின் மத்தியில் இருந்தும் பிரபாகரன்கள் உருவாகுவார்கள் என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை' வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

கௌதம புத்தர் அன்பையும் கருணையையும் போதித்தவர். ஆனால், அவரது பெயரால் காவியுடை தரித்தவர்கள் இன்று முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பதற்காக அவர்கள் சக பிக்கு ஒருவரையே  பிளேடினால் படுகாயப்படுத்தியதோடு, ஆணுறுப்பையும் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்கள். கௌதம புத்தர் இன்று இருந்தால் பௌத்த இனவாதிகள் அவருக்கும் சுன்னத்துச் செய்திருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

தென்பகுதி முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (20) யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை நடத்தின. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

'அளுத்கம, பேருவளை, தர்கா நகரில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல்களாகக் காட்டுவதற்கே அரசு முயற்சிக்கின்றது.

ஆனால் இனம், மதம் மற்றும் பண்பாட்டுப் பல்வகைமையை நிராகரித்து ஒட்டுமொத்த இலங்கையையும் சிங்கள பௌத்த நாடாக மாற்றுகின்ற அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் ஒருபகுதியே முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை.

இப்படித்தான் தமிழர்கள் மீது காலத்துக்குக் காலம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கடைசியில் இன அழிப்புப் போராகவே உருவெடுத்தது.

ஆட்சியாளர்கள் சிங்கள மக்களிடையே பேரினவாதத்தை ஊட்டுவதன் மூலமே தங்கள் ஆட்சி அதிகாரங்களைத் தக்கவைக்க விரும்புகிறார்கள். விடுதலைப் புலிகள் இருக்கும் வரையில் அவர்களைக் காட்டிக்காட்டி இனவாதம் வளர்த்த பேரினவாதத்தின் கவனம் இப்போது முஸ்லிம் மக்களின் பக்கம் திரும்பியிருக்கிறது.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் சிலர், பிரபாகரன் இருந்திருந்தால் தங்கள் மீது இப்படியான வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டிருக்காது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையின், இன அழிப்பின் வலிகளை நன்கு உணர்ந்தவர்கள். அந்தவகையில், முஸ்லிம் சகோதரர்கள் மீதான பேரினவாதத் தாக்குதல்களின் வலியை நாங்கள் உணர்ந்து கொள்கிறோம்.

அதனால்தான், முஸ்லிம் மக்கள் மீதான இனரீதியான தாக்குதல்களைக் கண்டிக்கும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். முஸ்லிம் அரசியல் தலைவர்களது சந்தர்ப்பவாத அரசியல் மற்றும் தகிடுதத்தங்கள் பற்றிப் பேசுவதற்கு இது தருணம் இல்லை. அப்பாவி முஸ்லிம் பொதுமக்களுக்கு எந்தவித நிபந்தனையும் அற்ற எங்கள் ஆதரவை நாம் வழங்குவோம்.

முஸ்லிம் மக்களும் நாங்களும் மதத்தால் வேறுபட்டவர்களாக இருந்தாலும் மொழியால் ஒன்றுபட்டவர்கள். தமிழ்பேசும் மக்களாக பேரினவாதத்துக்கு எதிராக நாங்கள் ஒன்றுபடவேண்டியது காலத்தின் கட்டாயம்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • M.A.A.Rasheed Friday, 20 June 2014 01:28 PM

    சரியாக சொன்னீர்கள்.துறவிகளைத் துன்புறுத்துவது துறவிகள்தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .