2025 ஜூலை 02, புதன்கிழமை

சகோதரர்களுக்கு விளக்கமறியல் : மேலும் ஒருவர் சரண்

Kanagaraj   / 2014 ஜூன் 23 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். கோண்டாவில் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (16) வீடு புகுந்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொலை செய்யப்பட்டவரின் சகோதரர்கள் இருவரையும் எதிர்வரும் ஜுலை மாதம் 4 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் திங்கட்கிழமை (23) உத்தரவிட்டார்.
 
குறித்த கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு  முன்னர், உரும்பிராயினைச் சேர்ந்த இருவரை தாக்கிப் படுகாயமடைய செய்தமை தொடர்பிலே ரவீந்திரன் செந்தூரன், ரவீந்திரன் சாரங்கன் ஆகிய இருவரும் கோப்பாய் பொலிஸாரினால் திங்கட்கிழமை (23) காலை கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
இந்நிலையில் மேற்படி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களில் ஒருவரான உரும்பிராய் சிவகுல வீதியினைச் சேர்ந்த யோகராசா ஜெனார்த் (24) என்பவர் திங்கட்கிழமை (23) சரணடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இது பற்றித் தெரியவருவதாவது,
 
மேற்படி சம்பவத்தில் கோண்டாவிலினை சேர்ந்த ரவீந்திரன் சுகிர்தன் (19) என்பவர் பலியாகியிருந்ததுடன், அவரது சகோதரர்களான ரவீந்திரன் லக்ஸணா (26), ரவீந்திரன் செந்தூரன் (23) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.
 
பலியாகிய சுகிர்தன் திங்கட்கிழமை (16) பிற்பகல் வீட்டிற்கு முன்னால் நின்றிருந்த வேளையில் அவ்வீதியின் வழியாகச் மோட்டார் சைக்கிளில் சென்ற சிலர் சுகிர்தனினை காலால் உதைந்துவிட்டுச் சென்றுள்ளனர்.
 
இதனை அவதானித்த சுகிர்தனின் உறவினர்கள் குறித்த மோட்டார் சைக்கிள்காரர்களைத் துரத்திச் சென்று அவர்களில் இருவரைப் பிடித்து நையப்புடைத்தனர். இதில் உரும்பிராயினைச் சேர்ந்த டி.றொபின்ராஜ் (20), எம்.நிராஜன் (23) ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
இதனையடுத்து, படுகாயமடைந்த இருவரின் உரும்பிராயக் கூட்டாளிகள், 7 மோட்டார் சைக்கிள்களில் திங்கட்கிழமை (16) இரவு சுகிர்தனின் வீட்டிற்கு சென்று வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் சுகிர்தன் பலியாகியதுடன், சகோதரர்கள் படுகாயமடைந்தனர்.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வந்ததில், றொபின்ராஜ், நிராஜன் ஆகியோரினை அடித்துப் படுகாயமடையச் செய்தனர் என்ற குற்றச் சாட்டில் சுகிர்தனின் சகோதரர்களான செந்தூரன், சாரங்கன் ஆகியோரினை இன்று (23) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்தக் கொலைச் சம்பவத்தினையடுத்து உரும்பிராய்ப் பகுதியிலுள்ள 7 வீடுகள் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .