2025 ஜூலை 02, புதன்கிழமை

சிறுபான்மையினர் தமக்கு கீழ் இருப்பதே பெரும்பான்மையினரின் விருப்பம்: சி.வி.

Kanagaraj   / 2014 ஜூன் 29 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சிறுபான்மையினர் தமது கைக்கு அடங்கும் விதத்தில் வாழ்வதையே இலங்கையிலுள்ள பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். மாறாக சிறுபான்மையினர் அபிவிருத்தி அடைந்து நல்ல நிலையை அடைந்து சென்றால் பெரும்;பான்மையினத்தவர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மாந்தை மேற்கு பிரதேச சபையின் சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை (28) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இணைப் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

சிறுபான்மையினர் முன்னேறினால், எங்களையும் பார்க்க விரைவில் முன்னேற இவர்களுக்கு என்ன உரித்து இருக்கின்றது என்று பெரும்பான்மையினர் சிந்திக்கத் தொடங்கி விடுகின்றார்கள். பின்னர் அதைத் தடை செய்ய முற்படுகின்றார்கள்.

இந்த விழாவில் சகோதரர் ரிஷாத் பதியுதீனுடன் சேர்ந்து பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அரசாங்க அமைச்சருடன் மாகாண அரசு இணைந்து இவ்விழாவில் ஈடுபட்டுள்ளது என்பதிலும் பார்க்க தமிழ் - முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இது வழிவகுத்துள்ளது என்பதே எனது மகிழ்ச்சிக்குக் காரணம்.

இவ்வாறு நான் கூறுவதற்குச் சிலர் ஆட்சேபணை தெரிவிக்கக் கூடும். அதாவது பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் ஏன் முதலமைச்சர் இரு இனங்களின் ஒத்துழைப்பை மட்டும் வலியுறுத்துகின்றார் என்று. இது இன ரீதியான பாகுபாடல்லவா? என்று அவர்கள் கேட்கக் கூடும். வரவேற்கப்பட வேண்டிய வார்த்தைப் பிரயோகம் அது. ஆனால் அதற்குக் காரணம் உண்டு.
இதுவரை காலமும் தமிழரில் சிலரும், முஸ்லிம்களில் பெரும்பாலானோரும் பெரும்பான்மையினருடன், 'சேர்ந்து வாழ்ந்தால் கோடி நன்மை' என்ற கூற்றுக்கு அமைவாக வாழ்ந்து வந்தார்கள்.

நாம் பெரும்பான்மையினரின் மொழியில் தேர்ச்சி பெற்று எமது சமயத்தையும் வாழ்க்கை முறையையும் கைவிடாது அவர்களுடன் நல்லுறவுடன் ஒழுகி வந்தோமானால் எமக்குப் பிரச்சினைகள் எழமாட்டா என்று முஸ்லிம் சகோதரர்கள் இதுவரை காலமும் நினைத்து வாழ்ந்து வந்தார்கள்.

ஏன் இந்தத் தமிழ் பேசும் மக்களும் எங்களைப் போல நல்லுறவுடன் வாழாமல் முரண்டு பிடிக்கின்றார்கள் என்றும் கேள்வி கேட்டு வந்தார்கள். ஆனால் அண்மையில் நடந்திருக்கும் அனர்த்தங்கள் அவர்களைச் சற்றுச் சிந்திக்க வைத்துள்ளன. சகோதரர் றிசாத் அவர்களை ஜனாதிபதியுடன் நேருக்கு நேர் மோதவும் இந்தச் சம்பவங்கள் (அளுத்கம, பேருவனை) இடமளித்துள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் முஸ்லிம் மக்களின் தாய்மொழி தமிழ். அவர்கள் மற்றைய தமிழ்மொழி பேசும் மக்களுடன் மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால், அந்தப் பாரம்பரிய உறவை பரிகசித்துத் தூக்கி எறிந்ததே எமக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழ்ப் பேசும் அலகு ஆட்சிக்கு வரவேண்டும் என்று எவ்வளவோ மன்றாடியும் அதனை உதாசீனம் செய்தது எமக்கு மனவருத்தத்தைக் கொடுத்தது. என் நண்பர்எம்.எச்.எம்.அஷ்ரப்  உயிரோடு இருந்திருந்தால் அவர் தமிழ் - முஸ்லிம் உறவைப் பேணிப் பாதுகாக்கவே முடிவு எடுத்திருப்பார் என்பது எனது கணிப்பு.

பெரும்பான்மையினருடன் சேர்ந்து காரியங்கள் இயற்றுவதில் பிழையில்லை. ஆனால் எமது தனித்துவத்தை மறந்து சுயநல காரணங்களுக்காகப் பெரும்பான்மையினருடன் சேர முற்பட்டால் எம் மீதான மரியாதை குறைந்து விடும்.

இன்று கூட  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பற்றியும் அரசாங்கத்துடன் சேர்ந்து அரசியல் நடத்தும் தமிழ்த் தலைவர்கள் பற்றியும் பெரும்பான்மை சமூகத்தினரிடையே இருக்கும் கருத்தைக் கணித்தால், அந்த மக்களுக்கு சம்பந்தன் மீது இருக்கும் மட்டு மரியாதை மற்றவர்கள் மீது இல்லை என்பது தெரியவரும்.

இதனை நான் அரசியலுக்கு வர முன்பே தெரிந்து வைத்திருந்தேன். எப்பொழுதுமே நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அரசியல் செய்வதே சாலப் பொருந்தும் என்று நம்புகின்றேன். இன்று அமைச்சர் (ரிஷாத்) எம்முடன் ஒரே மேடையை அலங்கரிப்பதால் அவரிடம் ஒரு கோரிக்கை விடுக்கின்றேன். தயவு செய்து தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக நீங்கள் உங்களால் இயன்றளவுக்கு ஒத்தாசை வழங்குங்கள். அதுவும் மன்னாரில் தமிழ்ப் பேசும் கிறிஸ்தவ மக்களின் நலன்களைப் பாதுகாப்பீர்களாக. நாங்கள் அனைவரும் சேர்ந்து, ஆனால் எமது தனித்தனியான உரிமைகளுக்காகப் போராடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .