2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

தமிழ் பேசும் மக்களை சிங்களவர் புகழ்ந்தார்கள்: சி.வி.

Suganthini Ratnam   / 2014 ஜூன் 30 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


தனது பால்ய வயதுடைய காலத்தில் வடமாகாண தமிழ் பேசும் மக்களை அறிவில் சிறந்தோர், அலுவலக ஆற்றலில் சிறந்தோர் என்றெல்லாம் சிங்கள மக்கள் புகழ்ந்தார்கள் என  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம், மலையாள்புரம், விவேகானந்தநகர், அம்பாள்புரம், செல்வநகர், பொன்னகர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களை  கிருஷ;ணபுரம் விபுலானந்த விளையாட்டுக்கழக மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) சந்தித்து இவர்களின்  குறைகளை வடமாகாண முதலமைச்சர் கேட்டறிந்துகொண்டார். இதன்போது, இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'அதே காலகட்டத்தில் மலையகத் தமிழ் மக்களை சுற்றாடலுக்கேற்ப வேலை செய்யும் சுறுசுறுப்பு மிக்கவர்கள். செயல்நுட்பத் திறமை மிக்கவர்கள் என்றெல்லாம் புகழ்ந்தார்கள். எமது முஸ்லிம் சகோதரர்கள் வணிகத்தில், வியாபாரத்தில் கைதேர்ந்தவர்கள் என்று புகழ்ந்தார்கள்.

ஆனால், அரசியல் அதிகாரம் தம் கைக்கு வந்தவுடன் இராகம் மாறியது. எல்லோருமே எங்கள் வளங்களை கொள்ளையிட வந்த வேற்று நாட்டவர்கள் என்ற புதிய குரல் மேலோங்க ஆரம்பித்தது.

இந்தக் குரலின் உரத்த தன்மையால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இங்கிருந்து வசித்துவந்த வட, கிழக்கு மாகாண தமிழர்களின் தொன்மையும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து இங்கிருந்து வந்த முஸ்லிம்களின் நீண்ட வசிப்பும் அண்மையில் என்றாலும் அவர்களின் ஆற்றலை அடையாளங்கண்டு மலையகத்தில் ஆங்கிலேயரால் குடியேற்றப்பட்ட மலையகத் தமிழரின் உரிமைகளும் குறித்தொதுக்கப்பட்டு சகலரும் இந்நாட்டிற்கு தேவையற்றவர்கள் என்ற கோஷம் எழுந்தது. பெரும்பான்மை இனச் சமூகத்தினருக்கே நாடு சொந்தம் என்று வாசகம் வலுப்பெற்றது.

இதன் தாக்கம் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. முதலில் 1958இல் எமது வட,கிழக்கு மாகாண மக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் 1977இல் மலையக மக்கள் பாதிக்கப்பட்டனர். 1983இல் தமிழர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். தற்பொழுது முஸ்லிம்; சகோதரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இவ்விதமான பாதிப்புக்களின் மத்தியில்தான் நீங்களும் உங்கள் முன்னையவர்களும் 1977ஆம் ஆண்டிலும் அதற்குப் பின்னரும் மலையகத்திலிருந்து அடிபட்டு இடிபட்டு வடமாகாணத்திற்கு வந்து வன்னியை உங்கள் சொந்தப் பூமியாக்கிக்கொண்டீர்கள். காடுகளாகவிருந்த நிலங்களை களனிகள் (வயல் நிலங்கள்) ஆக்கினீர்கள்.

இன்று எமது தமிழரின் வடமாகாணசபை ஆட்சிக்கு வந்துள்ளது. அந்த ஆட்சியை ஆட்டம் காணவைக்கச் சதிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், உங்கள் பிரச்சினைகள் இன்னும் நீண்டு  செல்வதைக் காண்கின்றேன்.

காணி சம்பந்தமான பிரச்சினைகளே உங்களுக்கு மிக முக்கியமானவை. வாழ்வாதாரம், வாழ்க்கைப் பிரச்சினைகள் என்று பலதையும் எதிர்கொண்டுள்ளீர்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் விட வேறொரு முக்கிய பிரச்சினையை நீங்கள் எதிர்கொண்டுள்ளீர்கள். அதுதான் பிரதேசவாதம்.

எமது அலுவலர்களில் சிலர் பிரதேசவாதத்தை எழுப்பி 'நீங்கள் மலையகத் தமிழர்கள், நாங்கள் உள்ளூர் தமிழர்கள். உங்களுக்கு உரித்துக்கள் தரமாட்டோம்' என்று கூறி பக்கச்சார்பாக நடந்துகொள்வதாக அறிகின்றேன். அவ்வாறு நடந்துகொள்ளும் அலுவலர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

'நீங்கள் எவ்வாறு எமது மலையகத் தமிழர்களை அந்நியர்களாகக் கருதுகின்றீர்களோ, அதேபோல்த்தான் உங்களை அந்நியர்கள் என்று  சிங்கள பிக்குமார் கூட்டம் கூடிக் கூறுகின்றனர். தயவுசெய்து அவ்வாறு கூறுவதைத் தவிர்த்து மனிதாபிமானமான முறையில் நடந்துகொள்ளுங்கள்'.

இன்று எமது வட, கிழக்கு மாகாண மக்கள் பெருந்தொகையாக வெளிநாடு சென்றுள்ளனர். எஞ்சியிருக்கும் நாம், எமது உரித்துக்களுக்காக போராடி வருகின்றோம். இப்பேர்ப்பட்ட காலகட்டத்தில் எமக்கு தோள் கொடுத்து எம்முடன் வாழும் மலையகத் தமிழர்களுக்கு அதிகாரப் பாகுபாடு காட்டுவது என்ன நியாயம். அலுவலர்களே! தயவுசெய்து உங்கள் பிழையான நடவடிக்கைகளை நிறுத்துங்கள். ஆணவம் இடம் கொடுக்கவில்லை என்றால் மனித உரிமைகளையாவது சிந்தித்துப் பார்த்து நிவாரணங்களை இம்மக்களுக்கு வழங்க முன்வாருங்கள். அவ்வாறு செய்யாதுவிட்டு உங்கள் செய்கைகள் அம்பலத்துக்கு வந்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்லி வைக்கின்றேன்.

பாரதத்தில் முகாம்களில் முடங்கிக்கொண்டு இருப்பவர்களும் எம்மவரே. அவர்களை அழைத்துவந்து இங்கு அவர்தம் இடங்களில் குடிவைக்க வேண்டும். எம்மாலான உதவிகளை அவர்கள் அனைவருக்கும் செய்து கொடுப்பது எமது தலையாய கடமையாகும். அலுவலர்களின் அசிரத்தையால் எமது இந்தப் பிரதேச மக்கள் பாதிப்படையாமல் பார்த்துக்கொள்வது எமது கடமை.

இந்தக் கடமையிலிருந்து நாங்கள் தவறமாட்டோம் என்பதையும் கூறி வைக்கின்றேன். உங்கள் குறைகளை எழுத்;து மூலம் எமக்குத் தெரிவியுங்கள். விரைவில் உங்கள் ஒவ்வொருவரின் குறைகளுக்கும் முடிந்த வரையில் நாங்கள் நிவாரணங்களை தேடிப் பெற்றுக்கொடுப்போம்' என்றார்.

இச்சந்திப்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .