2025 ஜூலை 05, சனிக்கிழமை

மஹிந்த சிந்தனை என்பது நாடு தழுவியதான அரசின் கொள்கைத் திட்டம்: டக்ளஸ்

Kanagaraj   / 2014 ஜூலை 07 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


மஹிந்த சிந்தனை என்பது நாடு தழுவியதும் பாரபட்சமற்றதுமான கொள்கை திட்டமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் மஹிந்தோதய தொழில்நுட்பபீடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்றைய தினம் (07) பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த சிந்தனை என்பது மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் கொள்கைத்திட்டமேயன்றி ஒருதனிநபர் கொள்கைத் திட்டமல்ல இது நாடுதழுவிய கொள்கைத் திட்டமாகும். அத்துடன், நாடளாவியரீதியில் பாரபட்சமற்ற வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் தான் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் இத்திட்டத்தின் ஊடாக குறித்தொதுக்கப்பட்ட சில செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சுட்டிக்காட்டினார்.

நான் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இக்கல்லூரிக்கும் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கியுள்ளேன். வடமாகாணசபை தேர்தலுக்கு முன்பதாக வடமாகாண ஆளுநரின் நேரடி நெறிப்படுத்தலின் கீழ் கல்வித்துறைக்கு மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

இதன்பெறுபேறாகவே கடந்த வருடம் வடமாகாணம் கல்வியில் சிறந்த பெறுபேற்றை பெற்றுக் கொண்டதையும் அமைச்சர்; இதன்போது எடுத்து விளக்கினார்.

முன்பதாக கல்லூரி வளாகத்திலுள்ள சிவஞானவைரவர் கோவிலில் சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரிசிறி உள்ளிட்டோர் மாணவரின் இசை அணிவகுப்புடன் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

புதிதாக அங்கு நிர்மாணிக்கப்படவுள்ள மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதுடன் இன்றைய நிகழ்வுக்கான நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து பாடசாலை வளாகத்திலுள்ள ஆறுமுகநாவலரின் உருவச்சிலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் மலர் மாலை அணிவித்தார்.

கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரி அதிபர் கணேசராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநர், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

60 மில்லியன்  ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மகிந்தோதய தொழில்நுட்ப பீடத்தின் கட்டுமாணப்பணிகளுக்காக 30 மில்லியன் ரூபாவும், இயந்திர மற்றும் உபகரணத் தொகுதிக்காக 30 மில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது வடமாகாண கல்விப் பணிப்பாளர் ராஜேந்திரன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண கல்வியமைச்சின் உதவிச் செயலாளர் தெய்வேந்திரராஜா, யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார், வடமாகாண கல்வி அபிவிருத்தி குழுத் தலைவர் இரா.செல்வவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .