2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

'மண்டைதீவு சட்ட நிர்வாக பொறுப்புக்களை யாழ்ப்பாணத்துக்கு மாற்ற வேண்டும்'

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


மண்டைதீவு மக்களின் சட்ட நிர்வாக பொறுப்புகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றித்தர ஆவண செய்யுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், மண்டைதீவு மக்களின் சார்பாக உரையாற்றிய திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் ந.விஜயசுந்தரம் கோரிக்கை விடுத்தார்.

யாழ். மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை திறப்பு விழா இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு மண்டைதீவு மக்கள் சார்பாக உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது, 

'மண்டைதீவு மக்களுக்கான பொலிஸ் பிரிவு மற்றும் நீதிமன்றம் என்பன ஊர்காவற்துறையாகவே காணப்படுகின்றது. அங்கு செல்வதாயின் இப்பிரதேச மக்கள் இங்கிருந்து பண்ணை சந்திக்கு வரை பஸ்ஸில் சென்று தொடர்ந்து, அங்கிருந்து ஊர்காவற்துறைக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறாக அவர்கள் இரண்டு பஸ்களில் பயணம் செய்து சுமார் 30 கிலோமீற்றர் தூரம் அவர்கள் செல்ல வேண்டும். ஆனால் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவும் யாழ்ப்பாண நீதிமன்றமும் 8 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கின்றது.

எனவே, மக்களின் சிரமத்தைக் கருத்திற்கொண்டு மண்டைதீவு மக்களின் சட்ட நிர்வாக பொறுப்புக்களை யாழ்பாணத்திற்கு மாற்ற முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, இவ்வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி ஒன்றினையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், மண்டைதீவு பிரதேசமானது பறவைகள் சரணாலயம் அமைப்பதற்கு உகந்த பிரதேசமாக இருப்பதனால் இங்கு பறவைகள் சரணாலயம் அமைப்பதன் மூலம் இங்குள்ள மக்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் அதிகரிப்பதுடன் மண்டைதீவு மக்களின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும் எனத் தெரிவித்தார்.

எனவே மண்டைதீவு பிரதேசத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .