2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பொலிஸாரின் கடமைகளில் டக்ளஸ் தலையிடுவதில்லை: றொஹான் டயஸ்

Gavitha   / 2014 ஜூலை 19 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொலிஸாரின் கடமைகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருபோதும் தலையிடுவதில்லை என்றும், இதனால் பொலிஸாருக்கு அவர்களது கடமைகளை சுதந்திரமாக முன்னெடுக்கக் கூடியதாக இருப்பதாகவும் யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (18) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

காரைநகரில் இடம்பெற்ற சிறுமிகளின் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு கடற்படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில்  உண்மையை கண்டறியும் பொருட்டு 7 கடற்படையினரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளோம்.

அவர்களை ஆள் அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்தி, குற்றவாளியைக் கண்டறிவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றவாளி இனங்காணப்படும் பட்சத்தில், அவர்களுக்குரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.

இச்சம்பம் தொடர்பில் கடற்படையினர் சார்பாக தமிழ் கட்சி உறுப்பினர் ஒருவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டதாக பத்திரிகைகளில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

குற்றச் செயல்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் இடம்பெறுகையில் பிரதேச செயலர்களோ, அரச அதிகாரிகளோ உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துங்கள்.

இதன் மூலம் எதிர்காலத்தில் பொலிஸாருக்கும் அரச உத்தியோகத்தர்களுக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும். குற்றங்களை தடுக்கவும் முடியும் என்று தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் போது, யாழ்.மாவட்ட ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்), மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, அமைச்சரின் ஆலோசகர் சுந்தரம் டிவகலால உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .