2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வடமாகாண சபைக்கு எதிராக போராட்டம் நடத்த மறுப்பு

George   / 2014 ஜூலை 20 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரணைமடுவில் இருந்து தீவகத்துக்குத் தண்ணீர் எடுத்துவருவதற்காக வடக்கு மாகாணசபையை  வற்புறுத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கு அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்தவர்கள் வற்புறுத்தியதாகவும் அதற்கு ஊரி மக்கள் மறுப்புத் தெரிவித்திருந்ததாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார்.

யாழ். காரைநகர் ஊரிப் பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்காக நாளாந்தம் 2 பவுஸர் குடிநீர் வழங்குவதற்கு வடமாகாண விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) முதல் கட்டமாக விநியோகம் செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

எங்களைப் போன்றுதான் கிளிநொச்சி மக்களும் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதால் இரணைமடுத் தண்ணீர் எங்களுக்கு வேண்டாம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள மறுத்து விட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாத நிலையிலும் உணர்ச்சி வசப்படாமலும், ஏமாற்று நடவடிக்கைகளுக்குப் பலியாகாமலும் தெளிவான பதிலைச் சொன்ன ஊரி மக்களை நான் பாராட்டுகின்றேன்.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று அடம்பிடிப்பவர்களின் பின்னால் பெரிய அரசியல் சூழ்ச்சி மறைந்து கிடக்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் உணவு உற்பத்தியை நிர்மூலமாக்கி உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வடக்கு மக்கள் எப்போதும் அரசிடம் கையேந்த வைப்பதற்காகவே வடக்கின் குடிநீருக்கு வேறு மாற்றுத்திட்டங்கள் இருந்தும் இரணைமடுத்திட்டத்தை மட்டுமே ஒரே தீர்வாக அரசும் அதன் ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

பவுசர்கள் மூலம் நாம் மேற்கொள்ளும்; நீர் விநியோகம் தற்காலிகமானது. ஊரிக் கிராமத்துக்கு மாத்திரம் அல்லாமல் தீவகம் முழுவதற்கும் சுத்தமான குடிநீரை தேவையான அளவு விநியோகிக்கும் நிரந்தரமான திட்டத்தை வடக்கு மாகாண சபை அதன் ஆட்சிக்காலம் முடிவடைவதற்குள் செய்து முடிக்கும் என்று உறுதி கூறுகின்றேன் என்றும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .