2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இடதுசாரி சிந்தனை ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் சிறப்புகளில் ஒன்று - மனோ

George   / 2014 ஜூலை 21 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகிழக்குக்கு வெளியே வாழும் மலையக தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்வாங்கியதும், சமூக ஜனநாயக நோக்குடன் கூடிய இடதுசாரி பார்வையை கொண்டு வந்து சேர்த்ததும்,  தமிழ் தேசிய போராட்ட பயணத்துக்கு, ஈழ மக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணி வழங்கிய காத்திரமான பங்களிப்புகள் என்பதை வரலாறு அறுதியிட்டு கூறுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற  ஈழ மக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணியின் 34வது சிறப்பு மாநாட்டில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஈழ மக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணியின் இந்த மாநாட்டில்,  உங்கள் தலைமைக்கும், அங்கத்தவர்களுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழுவினது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். இந்த வாழ்த்துடன் இரண்டு விடயங்களை உங்கள் வரலாற்றில் இருந்து எடுத்து காட்டவும் விரும்புகின்றேன். ஈரோஸ் அமைப்பு உங்கள் முன்னணியின் தாய் கழகம். இந்த அமைப்பில் ஆய்வுரீதியாக உருவாக்கப்பட்ட இரண்டு சிந்தனையோட்டங்களுக்கும், அவற்றையொட்டிய பங்களிப்புகளுக்கும்  ஈழ மக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணிக்கும் பாரிய உரிமை இருக்கின்றது.

வடக்கு கிழக்கில் தமிழ் மட்டும் என்ற தனித்தமிழ் இயக்கமாக வளர்ந்து வந்த தமிழ் தேசிய போராட்டத்துக்கு, இடதுசாரி சிந்தனையை ஊட்டியது அதில் முதலாவதாகும். இதன் மூலமாக இன விடுதலையுடன், சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான முன்னெடுப்புகளையும் கவனத்தில் கொண்டு வளரவேண்டிய தேவை தமிழ் தேசிய இயக்கங்களுக்கு ஏற்பட்டது. இதன் அடையாளமாகத்தான் இன்று தென்னிலங்கையில் இருந்து இடதுசாரி முன்னோடிகளான சிறிதுங்க ஜயசூரியவும், விக்கிரமபாகு கருணாரத்னவும் இன்று உங்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள் என நம்புகின்றேன்.

அடுத்தது, தமிழர் போராட்ட அபிலாசைகள் என்று சொல்லப்படும் போது அதற்குள் மலையக தமிழரது எதிர்பார்ப்புகளையும் உள்வாங்க வேண்டிய தேவையை ஈரோஸ் முதற்கொண்டு ஈழ மக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணிதான் வலியுறுத்தி கொண்டு வந்து சேர்த்தது.   இது மிகவும் காத்திரமான பங்களிப்பாகும்.

இன்று மலையகத்தை பூர்வீகமாக கொண்ட  தமிழர் வடக்கு, கிழக்குக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கிறார்கள். வடக்கு கிழக்கில் நடைபெற்ற, நடைபெறுகின்ற அனைத்து போராட்டங்களிலும் மலையக தமிழரது பங்களிப்பு கணிசமானது என்பது எவரும் இன்று அறிந்த யதார்த்த உண்மை. 

இறுதி யுத்தம் வரை ஆயுத போராட்டத்திலும், அறப்போராட்டங்களிலும் மலையக தமிழரது பங்கு இருந்தும், இருந்துகொண்டும் இருக்கிறது. இந்நிலையில் இன்று அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ் தேசிய பிரச்சினை பேசப்படமுடியாது. இது இன்றைய யதார்த்தம். இந்த யதார்த்தத்தை அன்றே தீர்க்கதரிசனத்துடன் ஈரோஸ் முதற்கொண்டு ஈழ மக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணி ஸ்தாபகர்கள் தெளிவாக புரிந்து, அறிந்து கொண்டிருந்தார்கள் என்பதுதான் உங்கள் கட்சியின் சிறப்பு. 

இன்று இந்த நீரோட்டத்தில் முஸ்லிம் மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். அதற்கு அடையாளமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் நண்பர் ஹசன் அலி இங்கே உங்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.  இந்த காலகட்டத்தில் எம்முன் எழுந்துள்ள புதிய சவால்களை சந்திக்கும் முகமாக நாம் வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கை என நாடு முழுக்க வாழும் தமிழர்களையும், முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற அமைப்புகளையும் அத்துடன் முற்போக்கு சிங்கள அமைப்புகளையும் ஒன்று சேர்த்து ஒரு பாரிய கூட்டு செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும், அதற்கு இந்த மாநாடு வழிகாட்டிட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .