2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

காணி அளக்க இடையூறு விளைவித்ததாக புகார்

Menaka Mookandi   / 2014 ஜூலை 21 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்., அச்சுவேலி, இராச வீதியில் 5ஆம் காலாற்படையினரின் முகாமிற்காக காணி அளவிடும் நடவடிக்கையில் ஈடுபடச்சென்ற போது, அங்கு நின்ற பொதுமக்கள் தம்மை பணி செய்ய விடாமல் தடுத்ததாக நிலஅளவையாளர் சிதரம்பரப்பிள்ளை இராமநாத சுவேந்திர கலாநிதியினால், இன்று திங்கட்கிழமை (21) முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிரேஸ்ட அளவையாளர் பி.சிவதாஸின் உத்தரவிற்கமைய யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பாதுகாப்பு அனுமதியுடன் தாம் நிலஅளவை செய்யச் சென்றதாகவும், ஆனால் அங்கு நின்ற பொதுமக்கள் எமது வாகனத்தினை சுற்றி நின்றதுடன், எமது நிலஅளவை உபகரணங்களை வாகனத்திலிருந்து எடுக்கவிடாமல் தடுத்தனர் என அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

மேலும், எம்மைப் பணி செய்யவிடாது தடுத்ததில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் முன்னின்று செயற்பட்டதாக நிலஅளவையாளர் அந்த முறைப்பாட்டில் தெரிவித்திருந்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியிலுள்ள 9 குடும்பங்களின் 53 பரப்புக் காணியினை இராணுவ முகாம் அமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நிலஅளவைப் பணிகளை பொதுமக்கள் இன்று திங்கட்கிழமை (21) போராட்டம் நடத்தி தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .