2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கணிதத்தில் சித்தியடையாமையால் மாணவர்கள் எதிர்காலத்தை இழக்கின்றனர்: பந்துல

Suganthini Ratnam   / 2014 ஜூலை 28 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கி.பகவான்


பாடசாலையில் இணைப்பாட விதானங்களில் சிறந்த விற்பனர்களாக காணப்படுகின்றபோதிலும், கணித பாடத்தில் சித்தியடையத் தவறுவதால் பல மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை  இழப்பதுடன், தங்கள் திறமைகளையும் கைவிட்டுச் செல்கின்றனர் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

வரணி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடம், அதிபர் அலுவலகம், ஆசிரியர் ஓய்வுஅறை மற்றும் நூலகம் ஆகியவை அடங்கிய கட்டிடத்தொகுதியை  அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை (27) திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'தற்போதுள்ள கல்விக் கொள்கைப் பிரகாரம் பாடசாலையில் இணையும் மாணவர்கள் வருடா வருடம் வகுப்பு ரீதியாக வகுப்பேற்றப்பட்டு வருகின்றனர்.  இருந்தும், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தி பெறாத காரணத்துக்காக  அந்த மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது.

இவ்வாறான கல்விக் கொள்கையால் வருடாந்தம் பல ஆயிரம் மாணவர்கள்  கணித பாடத்தில் சித்தி பெறாமல், தங்களது எதிர்கால வாழ்க்கையை இழந்துவிடுகின்றனர். இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களைச் சேர்ந்த வறுமை நிலையில் உள்ள மாணவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தரப் பீட்சையில் தோற்றியோரில் 71 சதவீதமானவர்கள் கணித பாடத்தில் சித்தியடையவில்லை. எனினும், கடந்த வருடத்தில் (2013) இல் 41 சதவீதமான மாணவர்கள் கணித பாடத்தில் சித்தியடையவில்லை.

இந்த நிலையில் அரசினால் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டு, கணித பாடத்தில் சித்தி பெறாத மாணவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கும் முகமாக இரண்டு வருட காலத்தினுள்; கணித பாடத்தில் சித்தி பெற வேண்டுமென்ற ஒப்பந்தத்தில் அந்த மாணவனுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் முன்பிருந்த நிலையைவிட தற்போது அனைத்து பௌதீக வளங்களும் ஆசிரிய வளங்களும் நிறைய வழங்கப்பட்டு வருகின்றன. சர்வதேச மொழியான ஆங்கிலக் கல்வியை வளம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்மொழிப் பாடசாலைகளில் தமிழ் மொழியிலும் சிங்கள மொழிப் பாடசாலைகளில் சிங்கள மொழியிலும் பாடங்கள் போதிக்கப்படுகின்றன. ஆனால், ஆங்கில மொழியைக்  கற்க வேண்டுமென்ற கல்விக் கொள்கை இல்லாததால், தமிழ், சிங்;கள மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

கொழும்பில் உள்ள மாணவன் ஆங்கில மொழி படிப்பதானால் பிரிட்டிஷ; கவுன்சிலில் சென்று படிக்கமுடியும். ஆனால், யாழ்ப்பாணத்து மாணவர்கள் ஆங்கிலம் கற்பதற்கு கொழும்பு சென்றால் பெருமளவு செலவுகள் ஏற்படுகின்றன.

ஏழை மக்களால் அந்தச் செலவுகளை தாங்கிக்கொள்ள முடியாது. இதைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளில் ஆங்கில மற்றும் கணினிக் கல்வித்திட்டம் கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இங்கு வாழும் அனைத்துக் குடும்பத்தினரும் தமது பிள்ளைகளுக்கு பிரத்தியேகமாக கணினி வாங்கிக் கொடுக்க முடியாது. இதைக் கருத்திற்கொண்டு  அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பக்கல்வி தொடக்கம் மாணவர்களுக்கு கணினிக் கல்வியை புகட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, பாடசாலைகளுக்கு கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் கணினிக் கல்வியுடன் ஆங்கிலக் கல்வியை இளவயது முதல் ஊடட்டக்கூடியதாகவிருக்கும்.

தற்போதுள்ள கல்வி முறையிலுள்ள குறைபாடுகளை தவிர்ப்பதற்காக தொழில்நுட்ப பாடத்தை உயர்தர வகுப்புகளில் அறிமுகப்படுத்தியபோதிலும், அவற்றை  கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது. அதனால், குறிப்பிட்ட அளவு பாடசாலைகளிலேயே தொழில்நுட்பபாட வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் 1,000 பாடசாலை அபிவிருத்தித் திட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

வரணி மத்திய கல்லூரி பல்வேறு கல்வி அபிவிருத்திகளை கண்டுவருவதால் பல திட்டங்களை இந்தக் கல்லூரியில் மேற்கொண்டு செயற்படுத்தி வருகின்றோம். அடுத்த ஜனவரி மாதத்திற்குள் இங்குள்ள மாணவர்களின் கல்வி நலன் கருதி 40 கணினிகளைக் கொண்ட கணினி ஆய்வுகூடமும் மொழித்தேர்ச்சி நிலையமும் அமைத்ததுத் தர நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .