2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மக்களின் நிலம் மக்களுக்கே: டக்ளஸ்

Menaka Mookandi   / 2014 ஜூலை 28 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மக்களின் நிலம் மக்களுக்கானது என்பதே தனது குறிக்கோள் என்று பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

'எமது மக்களின் பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு காண நாம் முயற்சிக்கும் போதெல்லாம் அதை குழப்பும் வகையில் சுயலாப அரசியல்வாதிகள் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர்' எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

பருத்தித்துறை வியாபாரிமூலை, எரிஞ்சம்மன் கோவிலடி பகுதியிலுள்ள மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

'எமது மக்களின் தேசிய பிரச்சினை உள்ளிட்ட அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென்பதையே நாம் விரும்புகின்றோம். ஆனால் சுயலாப அரசியல்வாதிகள் அதற்கு எதிர்மாறாக செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறாக மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் சுமூகமாக தீர்வு காண முயற்சிக்கும் போதெல்லாம் அதை அவர்கள் திட்டமிட்டு குழப்பி அதனூடாக அரசியல் ஆதாயத்தை தேடி வருகின்றனர்.

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்ட போது, அந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இலங்கை உட்பட ஏழு அயல்நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வட மாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

ஜனாதிபதியின் அழைப்பை முதலமைச்சர் அப்போது நிராகரித்திருந்தார். ஆனால், ஜனாதிபதியுடன் அவர் அங்கு சென்றிருந்தால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டிருக்க முடியும்.

இதன்போது, எல்லைமீறிய இந்திய மீனவர்களது தொழிற்துறை நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு தமக்கு கால அவகாசம் தேவையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்த போது எமது மக்களின் நலன்களுக்காக ஜனாதிபதி அந்த கோரிக்கைய நிராகரித்தார்' என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, மயிலிட்டித்துறை இறங்குதுறைக்கு சீமெந்து போடுமாறு தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அது தொடர்பில் இடர்பாடுகள் எதிர்கொள்ளப்படுமாயின் தமது கவனத்திற்கு தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது பருத்தித்துறை பிரதேச செயலர் ஜெயசீலன், ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளர் சிறிரங்கேஸ்வரன், ஈ.பி.டி.பியின் வடமராட்சி கரையோர இணைப்பாளர் ரட்னகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .