2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வீதிகளுக்கு மின்விளக்கு பொருத்தும் நடவடிக்கையின் இரண்டாம் கட்டம் பூர்த்தி

Kanagaraj   / 2014 ஜூலை 29 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பருத்தித்துறை வீதியில் பொருத்தப்பட்ட மின்விளக்குகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்த உத்தியோகபூர்வமாக ஒளிரச் செய்தார்.

நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்றலில் மேற்படி நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

வீதி அபிவிருத்தி சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதிப்புனரமைப்புப்  பணிகளின் ஒரு கட்டமாக மின் விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்பிரகாரம் ஏற்கெனவே முதலாம் கட்டமாக யாழ். துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து வீரசிங்கம் மண்படத்தின் ஊடாக சத்திரச்சந்தி வரை இவ் வீதிவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டத்தில்  பருத்தித்துறை வீதியில் முத்திரைச் சந்தியிலிருந்து நல்லூர் கோயிலைச் சூழவும் மற்றும் ஆனைப்பந்தி, ஆரியகுளம், வைத்தியசாலைச் சந்தி, வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை ஊடாக பிரதான வீதி வரையும் வீதி விளக்குகள் பொருத்தப்படும்.

இவ் மின் விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் முதற்கட்டமாக யாழ்.மாவட்டத்தில் யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்காலங்களில் பலாலி வீதி, காங்கேசன்துறை வீதி உள்ளிட்ட ஏனைய பிரதான வீதிகளிலும் இம்மின்விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.

பருத்தித்துறை வீதிக்கான 160 மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவை ஒளிரவிடப்பட்டுள்ளன. வீதி விளக்குகளால் இரவு நேரங்களில் ஏற்படக் கூடிய வீதி விபத்துக்களை தவிர்க்க முடியும் என்பதுடன் சமூக விரோத செயல்களையும் கட்டுப்படுத்த முடியுமென சமூக நலன்விரும்பிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே நல்லூர் கோயிலைச் சூழவுள்ள தனியார் காணிகளில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற கட்டடங்கள் தொடர்பாகவும் அவற்றின் பாதிப்புக்கள் தொடர்பாகவும் அமைச்சர் கவனம் செலுத்தியிருந்தார்.

அடுத்தமாதம் முதலாம் திகதி நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பிலும் அமைச்சர், அவதானம் செலுத்தியதுடன் துறைசார்ந்தோருடன் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.மாவட்ட பிரதேச மின் பொறியியலாளர் ஞானகணேசன், யாழ்.நகரப் பகுதி மின்அத்தியட்சகர் அருள்நாதன் ஆகியோருடன் மாநகர சபை உறுப்பினர்களும் உடனிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .