2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மண்ணின் மேம்பாட்டுக்காக உழைப்பவர் டக்ளஸ் : சனசமூக நிலையத் தலைவர் உரை

Super User   / 2014 ஜூலை 30 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்த மண்ணின் வளமான தோற்றப்பாட்டுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் மட்டுமல்லாது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என சங்கானை மத்தி தண்ணீர் தொட்டிலடி சனசமூக நிலையத் தலைவர் தெரிவித்துள்ளார்.

சங்கானை மத்தி கண்ணன் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை (29)இடம்பெற்றது. இங்கு தலைமையுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் மனிதர்கள் ஒவ்வொருவரும் தம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களுடன் கூடியதாக அபிவிருத்தியையும் ஒருசேர முன்னெடுக்க வேண்டும்.

அந்தவகையில் மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளை சிறந்த முறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றார்.

அதுமட்டுமன்றி இந்த மண்ணின் வளமான தோற்றப்பாட்டுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் அவர் அயராது உழைத்து வருகின்றார் என்பதுடன் எதிர்காலத்திலும் அமைச்சரால் மட்டுமே சிறந்த அபிவிருத்திகளை மட்டுமல்லாது மக்களது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினர் உரையாற்றும் போது கடந்தகாலங்களில் எமது மக்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிருந்து வந்தது.

ஆனால் தற்போது அந்த நிலை மாற்றப்பட்டு அமைதியான சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

எனவே தற்போதைய அமைதிச் சூழலை மக்கள் பாதுகாத்துக் கொள்வதன் ஊடாகவே மேலும் முன்னேற்றங்களை காணமுடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே சனசமூக நிலையத் தலைவர் சிவதட்சணாமூர்த்தி விடுத்த கோரிக்கைகள் தொடர்பில் கவனத்துடன் பரிசீலித்து நிச்சயம் தீர்வு காணப்படுமென அமைச்சர் தெரிவித்தார்.

முன்பதாக தொட்டிலடி சனசமூக நிலைய முன்றலிலிருந்து சிறார்களின் இசை அணிவகுப்புடன் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்ட அமைச்சர் அவர்கள் ஆசியுரை வழங்கியதுடன், முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழாவையும் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதில் சிறார்களுக்கு அமைச்சர் பரிசில்களை வழங்கி வைத்தார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் வலிகாமம் இணைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்), வடபிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபன சந்தைப்படுத்தல் நிறைவேற்று அதிகாரி ஜெயபாலன், வலிகாமம் வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் ரூபா உதயரட்னம், சங்கானை பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார், ஈ.பி.டி.பியின் வலிகாமம் மேற்கு மக்கள் சபையின் செயலாளர் குணசிறி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .