2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மாட்டிறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த மாட்டிறைச்சிக் கடைகள் அனைத்தும் நாளை சனிக்கிழமை (02) முதல் பொது சுகாதார பரிசோதகரின் தீவிர  கண்காணிப்பின் கீழ் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக சாவகச்சேரி கால்நடை வைத்தியதிகாரி ஜீ..ரகுநாதன் வெள்ளிக்கிழமை (01) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள மாடுகளுக்கு கடந்த ஜுன் மாதத் தொடக்கத்தில் கால்வாய் நோய்த் தாக்கம் பரவியமையினால் பிரதேசத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகளை மூடும்படி உத்தரவிடப்பட்டது.

கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் வரணி வரையான இடங்களிலும், எழுதுமட்டுவாள் ஏ – 9 வடக்கு, மிருசுவலி வடக்கு பகுதியில் குடமியன், நாவற்காடு, எருவன், எழுதுமட்டுவாள் படித்த மகளிர் குடியேற்றத்திட்டம், வரணி உள்ளிட்ட இடங்களிலுள்ள பண்ணை மாடுகளுக்கே கால்வாய் நோய் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது.

தொடர்ந்து, கால்நடை வைத்தியதிகாரி பிரிவினால் கால்வாய் நோய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தொற்று ஏற்பட்டுள்ள பிரதேசத்தினைச் சுற்றியுள்ள 15 கிலோமீற்றர் பகுதியிலுள்ள மாடுகளுக்கு முதற்கட்டமாக கால்வாய் நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டு தொடர்ந்து தொற்று ஏற்பட்ட பகுதிகளிலுள்ள மாடுகளுக்குத் தடுப்பூசி ஏற்றுவது என்ற ரீதியில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தடுப்பூசி ஏற்றும் காலத்தில், மேற்படி இடங்களிலிருந்து மாடுகள் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதும், வெளியிடங்களிலிருந்து மாடுகள் மேய்ச்சலுக்காக இவ்விடங்களுக்குக் கொண்டு வருவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தது.

இதனால் பிரதேசத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடைகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், கால்வாய் நோய்த் தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து மாட்டிறைச்சிக் கடைகள், நாளை சனிக்கிழமை (02) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

எனினும், அவ்வாறு திறக்கப்படும் மாட்டிறைச்சிக் கடைகள் பின்வரும் நிபந்தனைகளைப் பின்பற்றித் திறக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

1. இறைச்சிக் கடைகளை நடத்துவோர், கால்வாய் நோய்ப் பிரதேசமென அடையாளம் காணப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் இறைச்சி வெட்டுவதற்கென மாடுகளை தற்காலிகமாகக் கொள்வனவு செய்ய முடியாது.

2. தென்மராட்சிப் பிரதேசத்தில் இறைச்சிக்காக கொள்வனவு செய்யப்படும் மாடுகள் அனைத்திற்கும் காதடையாளம் இடப்பட்டிருத்தல் அவசியமாகும்.

3. இறைச்சிக்காக கொள்வனவு செய்யப்படும் மாடுகள் அனைத்திற்கும் காதடையாள இலக்கம் இடப்பட்டு உரிமையாளரிடமிருந்து பெறப்படும் கடிதம் அந்தந்தப் பிரிவு கிராம அலுவலரினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

மேற்கண்ட நிபந்தனைகளுடன், கொல்களங்களில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக கால்நடை வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .