2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அதிகாரிகள் விபரங்களை தருவதில்லை : சி.வி

George   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் வவுனியா மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாக பல அலுவலர்களிடம் விபரங்கள் கேட்டிருந்தும் அதற்கான பதில் அளிக்கப்படாமலேயே இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று திங்கட்கிழமை (04) தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலரின் புதிய கருத்தரங்கு மண்டபத்தில் திங்கட்கிழமை (04) இடம்பெற்றது.

இதில், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷhத் பதியுதீனுடன், இணைத்தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தான் அலுவலர்களிடம் கேட்ட கேள்விகளாக பின்வரும் கேள்விகளை இதன்போது முதலமைச்சர் குறிப்பிட்டார்.

1.   2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் திட்டமிடப்பட்ட அல்லது நடைமுறைப்படுத்தி எடுக்கப்பட்ட செயற்திட்டங்களின் முழு விபரங்களையும் உரிய அலுவலர்கள் எமக்குத் தந்துதவுவார்களா?

2.   இந்திய வீட்டுத்திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? யார் யாருக்கு வீடுகள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டன? என்ன அடிப்டையில் அவை வழங்கப்பட்டன? மிகுதியுள்ள வேலைகள் என்ன?

3.   வடமாகாணத்தில் 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதிக்குப் பின் இணைத்தலைவர் அவர்களின் மத்திய அமைச்சினால் செயல்ப்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களும் செயற்திட்டங்களும் எவையாவன?

4.   இவற்றிற்கு நிதி வழங்கிய தாபனங்கள், தனிப்பட்டவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசாங்கம், அரச முகவர்கள் என்பன பற்றிய விபரங்களைத் தர முடியுமா?

5.   ஜனாதிபதி செயலணி தனது காலத்தின் போது முடித்துவைத்த செயற்திட்டங்கள் எவை எவை? ஏதாவது இன்னும் முடிவு பெறாத நிலையில் இருக்கின்றனவா? தற்;போது அவை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றனவா?

6.   31.05.2014 அன்று செயலணி செயல்ப்படாது போனபின் மேற்படி செயற்திட்டங்கள் எவ்வாறு யாரால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன?

7.   திவிநெகும வந்த பின் ஆற்றுப்படுத்தப்படும் செயற்திட்டங்கள் எவை எவை? அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்ற விபரங்களைத் தரமுடியுமா? இவ்வாறு 31.05.2014ன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில், செயற்திட்டங்களில் வடமாகாணசபை இணைக்கப்பட்டுள்ளதா?

போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தும், அதற்குரிய பதில்கள் இதுவரையில் தனக்குக் கிடைக்கப்பெறவில்லையென முதலமைச்சர் குறிப்பிட்டார். மேலும், இது தொடர்பில் வவுனியா மாவட்டச் செயலரின் கடிதம் சனிக்கிழமை (02) கிடைக்கப்பெற்றதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார். அந்தக் கடிதத்தினை வாசித்த பின்னர் அந்தக் கடிதத்தில் விடுபட்ட விடயங்கள் பற்றி மாவட்டச் செயலரிடம் கேள்வி கேட்பேன் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .