2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'இஸ்ரேல் மீது சர்வதேச விசாரணை நடத்தப்படல் வேண்டும்'

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'பலஸ்தீன் காஸாவில் நடைபெற்ற கொடூர தாக்குதல்களுக்கு இஸ்ரேல் மீது சர்வதேச விசாரணை நடத்தப்படல் வேண்டும்' என ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமுனைக் கேட்டுள்ளது.

இது தொடர்பாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.எல்.எம்.பளீல் கையொப்பமிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீமூனுக்;கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் ஐ.எல்.எம்.சஹீது தெரிவித்தார்.

இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

'அண்மையில் காஸாமீது இஸ்ரேல் மேற்கொண்ட கண் மூடித்தனமான தாக்குதல் மனிதாபிமானமுள்ள அனைவராலும் மிகவும் கண்டிக்கத்தக்க மிகவும் துக்ககரமான நிகழ்வாகும்.

இலங்கைக்கு எதிரான விடயத்தில் கைகோர்த்துச் செயற்பட்ட மேற்குலக நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் பலஸ்தீன் விடயத்தில் ஒரு தலைப்பட்சமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக செயற்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மேலும் பலநாடுகள் காஸா தாக்குதல் விடயத்தில் நடுநிலமை வகிக்கத் தவறியதுடன், நியாயத்தை கூறாது மௌனமாக இருக்கின்றன. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் காஸா தாக்குதல்களுக்கு எதிராக பலமான அழுத்தங்களை இஸ்ரேல் மீது பிரயோகிக்கவில்லை.

இத்தகைய செயற்பாடுகள் மனித நேயத்திற்கும், மனித உரிமைக்கும் மதிப்பளிக்காது முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுவதையே காட்டுகின்றது. 

ஐக்கிய நாடுகள் சபையானது காஸா தாக்குதல் விடயத்தினை மனிதாபிமானத்துடன் நடுநிலையாக நோக்க வேண்டும் என வினயமாக வேண்டிக்கொள்கின்றோம்.

தாக்குதல் நடவடிக்கையானது முஸ்லிம்களிகளின் புனித மாதமாகிய நோன்பு காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது மிகவும்  கண்டிக்கத்தக்கதும் மதச் சுதந்திரத்தை  மீறும் செயலாகவும் உள்ளது.

தாக்குதலின்போது  குடிமனைகள், அகதிமுகாம், பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள் என்பவற்றின்மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
தாக்குதல் காரணமாக குழந்தைகள், பெண்கள், அப்பாவிப் பொதுமக்கள் என்ற ரீதியில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளடன் அங்கவீனர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த நேரத்திலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொத்தத்தில் காஸா தாக்குதலானது முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது.

இன ரீதியான தாக்குதல்கள்களை ஐக்கிய நாடுகள் சபை அனுமதிக்கக்கூடாது. பலஸ்தீன் மக்களுக்கு நிரந்தர சமாதானத்தைப் பெற்றுக்கொடுக்கவேண்டியது ஐக்கிய நாடுகள் நாடுகள் சபையின் முக்கிய பணியாகும்.
 
எனவே உலக மக்களுக்கு உரிய   பாதுகாப்பையும் , உரிமைகளையும் பெற்றுத்தரவேண்டிய மேலாதிக்கமுள்ள சபையாகத் திகளும் ஐக்கிய நாடுகள் சபையானது காஸா தாக்குதல் விடயத்தில் பக்கசார்பற்ற முறையில் சர்வதேச விசாரணையை முன்மொழிய வேண்டும் எனக் கோரிக்கை விடுகின்றோம்' என்று அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .