2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பழிக்கு பழிவாங்கிய மூவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  செல்வநாயகம் கபிலன்

நுணாவிலில் 2010 ஆம் ஆண்டு, எஸ்.சின்னத்தம்பி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் நோக்கில் அவருடைய தம்பியான நாகராசா பார்த்தீபன் (வயது 30) என்பரை கொலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா புதன்கிழமை (13) உத்தரவிட்டார்.

சின்னத்தம்பியின் மனைவியான சின்னத்தம்பி பாக்கியம் (வயது 63), ஜெகநாதன் ஜெகதீபன் (வயது 26), பெரியதம்பி நிசாந்த் (வயது 21) ஆகிய மூவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த மூவரும் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இது சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தெரிவிக்கையில்,

நுணாவிலில் இரு உறவுக்கார குடும்பங்களுக்கு இடையில் 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட காணித் தகராற்றில் எஸ்.சின்னத்தம்பி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கணவனின் கொலைக்கு பழிவாங்க வேண்டும் என்ற நோக்குடன் அவரது மனைவியான பாக்கியம், கூலிப்படையை தயார் செய்து அவர்களை, தனது மைத்துனனான நாகராசா பார்த்தீபன் (வயது 30) என்பருடன் நெருங்கிப் பழக வைத்துள்ளார்.

மைத்துனனை போட்டுத்தள்ளுவதற்கு 5 இலட்சம் ரூபாய் கூலியும் பேசப்பட்டுள்ளது. அதற்கு  முற்பணமாக 2 இலட்சம் ரூபாவை பாக்கியம் வழங்கியுள்ளார். இந்தப் பணத்தை வெளிநாட்டிலுள்ள அவருடைய இரண்டு மகன்களும் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து கல்லுண்டால் வெளிக்கு கடந்த ஜுன் 10 ஆம் திகதி மிகத் தந்திரமான முறையில் பார்த்தீபனை அழைத்து சென்ற  கூலிப்படை அவருடைய கழுத்தை அறுத்து செய்ததுடன், முகத்தில் அசிற்றும் ஊற்றியுள்ளனர்.

மைத்துனனை போட்டுத்தள்ளியதும் மிகுதி 3 இலட்சம் ரூபாயை கூலிப்படை பெற்றுக்கொண்டுள்ளது. காசு கொடுக்கப்பட்ட விடயம் பாக்கியத்தின் வங்கிக் கணக்கு மூலம் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில், நுணாவில் பகுதியினைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கடந்த ஜுன் 15 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.  கைது செய்யப்பட்ட அவ்விருவரும் மல்லாகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அந்த சந்தேகநபர்கள் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளில், பழிக்கு பழிவாங்குவதற்காக இந்தக் கொலை செய்துள்ளமை தெரியவந்தது.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X