2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உயிரிழந்த தமிழ் இராணுவ வீராங்கனைக்கு புற்றுநோய்: இராணுவம்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


தமிழ் இராணுவ வீராங்கனை, புற்று நோய் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என வைத்திய பரிசோதனைகள் மூலம்  நிரூபணமாகியுள்ளது என யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்தது.

இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்களுக்கு கடினமான இராணுவ பயிற்சிகள் எவையும் வழங்கப்படுவதில்லை அத்துடன், அவர்கள் இராணுவத்தில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதில்லை என்று யாழ். படைத் தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ரஞ்சித் மல்லவாரச்சி தெரிவித்தார்.

யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பாதுகாப்பு படைகளின் சிவில் அலுவலகத்தில் சனிக்கிழமை (16) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநொச்சி  திருமுருகண்டியைச் சேர்ந்த  இராணுவ வீராங்கனையான பிரசாத் அஜந்தா (வயது 23) என்பவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த வியாழக்கிழமை மரணமடைந்தார்.

இந்நிலையில், அவரது மரணம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகம் தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மேஜர் ரஞ்சித் மல்லவாரச்சி கூறியதாவது,

இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட அனைவரும், அவர்கள் இராணுவத்தில் இணைந்த நாளில் இருந்து இராணுவத்தினராகவே கருதப்படுவார்கள். அவர்களுக்கு இன ரீதியாக எந்த வகையான வேறுபாடுகளும் காட்டப்படுவதில்லை. இராணுவத்தினர் அனைவருக்கும் வழங்கப்படும் அனைத்து வசதிகளும் மரணமடைந்த அஜந்தாவுக்கும் வழங்கப்படும்.

இவர் இராணுவத்தில் இணைக்கப்படும் வேளையில், முதலாவது படிவம் நிரப்பப்பட்டது. இதன்போது, நோய்கள் தொடர்பாக அவரிடம் கேட்டமைக்கு தனக்கு எந்தவகையான நோயும் இல்லையென தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்படுபவர்களுக்கு வழமையாக கண், காது, வாய், பற்கள், கைகள், கால்கள் போன்ற விடயங்களே மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுவது வழமையாகும்.

இவருக்கும் இந்த மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன. இவர் இராணுவத்தில் இணைந்து இரண்டு மாதங்களே ஆகும். இவர் பயிற்சியின் போது தனக்கு இயலாமல் இருப்பதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, பலாலியில் இயங்கும் இராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சிகிச்சை வழங்கும் சகல வசதிகளுடனும் கூடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பெண் இராணுவத்தினரால் பராமரிக்கப்பட்டார்.

இவருடைய நோயின் தாக்கம் மேலும் அதிகரித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பெற்றோர்களுக்கும் அறிவிக்கப்பட்டு அவர்களும் வந்து பார்வையிட்டார்கள்.

இந்நிலையில் இவருக்கு புற்றுநோய் இருப்பதாக வைத்தியர்கள் கண்டறிந்தனர். அவருடன் நின்ற இராணுவ வீராங்கனைகள் வைத்தியசாலையில் இருந்து அகற்றப்பட்டனர்.

இவருடைய மரணச்சடங்குகூட இராணுவத்தால், இராணுவ மரியாதைகளுடன் நடத்தப்பட்டுள்ளது. இது தான் முதற்தடவையாக வடக்கில் ஒரு தமிழ் இராணுவ வீராங்கனைக்கு நடந்த இராணுவ மரியாதையாகும்.

தற்போது தமிழ்ப் பெண்கள் 523பேர் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இணைக்கப்பட்டவர்கள் அவர்களுடைய தகுதிக்கு ஏற்ப பல தொழில்களிலும் சேர்க்கப்பட்டு கடமையாற்றி வருகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி இராணுவ வீராங்கனைக்கு, சூலகத்தில் ஏற்பட்ட புற்றுநோயானது அதிகரித்து குடலில் தடைகளை ஏற்படுத்தியமையால் மரணம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதிராசாவும் சனிக்கிழமை (16) உறுதிப்படுத்தினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .