2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

டக்ளஸ் இடையூறு விளைவிப்பதாக வடமாகாண அமைச்சர்கள் குற்றச்சாட்டு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தனது அமைச்சுத் தவிர்ந்த ஏனைய விடயங்களிலும் மூக்கை நுழைத்து தங்களுக்கு இடையூறாகவிருப்பதாக வடமாகாண அமைச்சர், உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர் (14 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டடத் தொகுதியில் வியாழக்கிழமை (21) இடம்பெறுகின்றது. இதன்போதே, மேற்படி விடயம் தொடர்பில் உறுப்பினர்கள் பரஸ்பரம் கருத்து கூறினார்கள்.

இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் இமானுவல் ஆர்னோல்ட் கூறியதாவது, 

வடமாகாணத்தில் விளையாட்டுத்துறை அமைச்சு ஒன்று இருக்கின்ற போதும், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அந்த அமைச்சின் அனுமதி பெறப்படாமல் நடக்கின்றன.

குறிப்பாக, யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு அருகில் உள்ளக விளையாட்டரங்கை அமைக்கும் பணியை சிறுகைத்தொழில் அமைச்சர் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பில் வடமாகாண சபைக்கு எந்தவித அறிவித்தல்களும் அனுப்பப்படவில்லை. அது அவருடைய (டக்ளஸ்) அமைச்சுடன் தொடர்புபட்ட விடயமும் இல்லை என தெரிவித்தார்.

இது தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் கூறியதாவது, 

சிறு கைத்தொழில் அமைச்சர் தனது அமைச்சுத் தவிர்ந்து கல்வி, விளையாட்டு மற்றும் விவசாயம் ஆகிய நடவடிக்கைகளிலும் தலையிடுகின்றார்.

இதனால் அது தொடர்பிலான நடவடிக்கைகளை ஒழுங்குமுறையில் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது என்றார். அத்துடன், எமது வடமாகாண சபையின் கீழுள்ள திணைக்களங்களின் அலுவலர்களிடம் இருந்து தகவல்களை கேட்பதாகவும் அவர்களை தகவல் கொடுக்கும்படி அறிவுறுத்துவதாகவும் அறிந்தேன் என கூறினார்.

இது தொடர்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவிக்கையில்,

வடமாகாண சபையின் ஒவ்வொரு அமைச்சின் அலுவலர்களையும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் அழைப்பதாகவும் அலுவலர்கள் அதற்கு ஏற்றாற்போல் செல்கின்ற நடவடிக்கையும் இடம்பெறுகின்றன.

ஆனால், எனது அமைச்சின் கீழுள்ள அலுவலர்களை நான் அவ்வாறு செல்ல அனுமதிப்பது இல்லை. அமைச்சர் இவ்வாறான அழைப்புக்களை மேற்கொள்வதற்கு ஒரு படிமுறை இருக்கின்றது. அந்தப் படிமுறையைப் பின்பற்றியே அவர் செயற்பட வேண்டும்.

படிமுறையின் பிரகாரமே அலுவலர்களை அழைக்க வேண்டிய நடைமுறை இருக்கின்றது. இதனை சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் உணர வேண்டும்.  இல்லாதுவிடின், நிர்வாக ரீதியில் அமைச்சருடன் மோதுகின்ற நிலைமை ஏற்படும் என ஐங்கரநேசன் குறிப்பிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .