2025 ஜூலை 09, புதன்கிழமை

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை அங்குரார்ப்பணம்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 27 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன் 


இந்திய - இலங்கை நட்புறவின் கீழ் இந்திய, இலங்கை அரசாங்கங்களின் 275 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கப்பட்ட அச்சுவேலிக் கைத்தொழிற்பேட்டை இன்று புதன்கிழமை (27) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

1971ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அச்சுவேலிக் கைத்தொழிற்பேட்டை தொடர்ந்து உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.

தொடர்ந்து, அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையை மீண்டும் செயற்படவைப்பதற்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சால், 2011 ஆம் ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டது.

அந்தவகையில், இந்திய அரசாங்கத்தின் 225 மில்லியன் ரூபாய் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 50 மில்லியன் ரூபாய் ஆகிய நிதிகள் மூலம், 65 ஏக்கரில் இக் கைத்தொழிற்பேட்டை அமைக்கப்பட்டு வருகின்றது.

கைத்தொழிற்பேட்டைக்கான உட்கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இந்தக் கைத்தொழிற்பேட்டையின் பகுதிகள் முதலீட்டாளர்களுக்கு 30 வருட காலப்பகுதிக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது 8 வரையான முதலீட்டாளர்கள் குத்தகைக்கு இடங்களைப் பெற்றுள்ளனர்.

இந்தக் கைத்தொழிற்பேட்டையின் மூலம் நேடியாக 2,000 பேரும் மறைமுகமாக 2,500 பேரும் வேலை வாய்ப்பைப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் அங்குரார்ப்பண நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமஹே, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா, வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .