2025 ஜூலை 09, புதன்கிழமை

மக்கள் சுகதேகியாக வாழவேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பம்: ஜி.ஏ.சந்திரசிறி

George   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் நல்லமுறையில் வாழவேண்டும், திடகாத்திரமான சுகதேகிகளாக அனைவரும் இருக்க வேண்டும் என்பதே இந்தநாட்டு ஜனாதிபதியின் விருப்பமும் எதிர்பார்ப்பாகும் என வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி புதன்கிழமை (03) தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் நோயாளர்கள் உள்ளிட்டவர்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் இதனை கூறினார்.

வழிபாட்டு இடங்களை எங்கள் உதவிகள் மூலம் சுத்தம் செய்து வருகின்றோம். இதனைப் போன்று ஏனைய வணக்கஸ்தலங்களையும் நாம் சுத்தம் செய்ய வேண்டும்.

நாம் உங்களுக்கு உதவி செய்கின்றோம். இதேபோன்று நீங்களும் உதவி செய்ய வேண்டும். இன்று வழங்கப்படும் வாழ்வாதார உதவிகளைப் போன்று உங்களுடைய பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளையும் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மேலும், ஆரோக்கியத்திற்கான உதவிகளையும் வழங்கியுள்ளோம். உங்களுடைய வாழ்வாதாரம் நல்ல முறையில் அமைய வேண்டும். உங்களுடைய எதிர்காலம் ஆரோக்கியமிக்கதாகவும் வளம்மிக்கதாகவும் அமைய வேண்டும் என்பதே எமது விருப்பம் எனத் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில், வடமாகாணத்தைச் சேர்ந்த மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 20 நோயாளர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் உதவி வழங்கப்பட்டது.

அத்துடன், வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கான கூரைத்தகடுகளும், ஆலய சுற்றாடலில் மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு நுளம்பு வலை, விளக்கு என்பனவும் வழங்கப்பட்டன.

மேலும், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி என்பவற்றிற்கு ஒரு தொகுதி ஆங்கில நூல்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .