2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அச்சமில்லாத நாடாக இலங்கையை மாற்ற நடவடிக்கை: அன்ரூ மன்

George   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

ஊடகவியலாளர்கள், நீதித்துறையினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் நிறுத்தப்பட்டு அச்சமில்லாமல் வாழக்கூடிய நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அமெரிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்குமென இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதம செயற்றிட்ட பணிப்பாளர் அன்ரூ மன் உறுதியளித்ததாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தார்.

வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், துரைராசா ரவிகரன், இமானுவல் ஆர்னோல்ட் ஆகியோருக்கும் அன்ரூ மன்னுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பு குறித்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சந்திப்பு குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐ.நா விசாரணைக்குழுவிற்கு மக்கள் துணிந்து சாட்சியமளிக்க முன்வரவேண்டும் என்றும், அதன் மூலமே அடுத்தகட்ட நடவடிக்கையை அமெரிக்காவால் மேற்கொள்ள முடியும் என அவர் எங்களுக்கு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்கள், இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு முதலமைச்சர் நிதியத்தை செயற்படுத்துவதற்கு அமெரிக்க ஒத்துழைக்க வேண்டும். அதன்மூலம் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ளவர்களின் பெருமளவான உதவிகள் எங்கள் மக்களுக்கு கிடைக்கும் என அவருக்கு கூறியிருந்தோம்.

அத்துடன், வடக்கில் மீள் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வடக்கிலுள்ள இராணுவம் வெளியேற்றப்படவேண்டும் எனவும் அவரிடம் கேட்டிருந்தோம்.

இலங்கையில் தமிழ்மக்கள் சுதந்திரமாகவும் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கு, சமஷ்டி முறையிலான தீர்வு அவசியம் வேண்டும் என்பதை அவரிடம் வலியுறுத்தினோம் என சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .