2025 ஜூலை 10, வியாழக்கிழமை

ஒளிராத மின்விளக்குகள் கொள்ளை

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் பொருத்தப்பட்டுள்ள ஒளிராத மின் விளக்குகள் திருடப்பட்டு வருகின்றன.

காங்கேசன்துறை வீதி, பருத்தித்துறை வீதி மற்றும் பலாலி வீதி ஆகியவற்றில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.

இந்த மின்விளக்குகளுக்கான மின்சார செலவை, மின்விளக்குகள் அமைந்துள்ள பிரதேச சபைகள் செலுத்த வேண்டும் என வீதி அபிவிருத்தி திணைக்களம் கோரியிருந்தது.

அதற்கு, நல்லூர், வலி.வடக்கு, கரவெட்டி ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

மேற்படி வீதிகளில் போடப்பட்டுள்ள ஒரு மின்விளக்குக்கு தலா 960 ரூபாய் மாதாந்த மின்கட்டணமாக செலுத்த வேண்டும். இருந்தும் அவ்வளவு நிதி பிரதேச சபைகளால் செலுத்த முடியாது என தவிசாளர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

அத்துடன், மின்விளக்குகள் மிக நெருக்கமாக போடப்பட்டு இருப்பதாவும், அவை பொருத்தப்படும் போது தங்களிடம் அனுமதி கோரியிருக்கவில்லையெனவும் தவிசாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, மின்விளக்குகள் பொருத்தப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் ஒளிராமல் அப்படியே இருக்கின்றன. இது தொடர்பான விடயம் கடந்த மே மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கதைத்திருந்த போதும், எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை. மின்விளக்குகள் ஒளிரவைப்பதற்கு எவரும் முன்வரவில்லை.

இந்நிலையில், காங்கேசன்துறை வீதியில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள்  திருடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .