2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

இனஅழிப்புக்கு த.தே.கூ பயமா?: சிவாஜிலிங்கம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 10 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், யோ.வித்தியா

வடமாகாண சபையில் 'இன அழிப்பு' என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பயப்படுகின்றதா? என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிட தொகுதியில் புதன்கிழமை (10) இடம்பெற்றது.

இதன்போது, 'தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளில் இருந்து பாதுகாக்க சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்துமாறு வேண்டுகோள்' என்ற பிரேரணையை சிவாஜிலிங்கம், சபையில் முன்வைத்தார்.

எனினும், அந்த பிரேரணையில் இடம்பெற்றுள்ள இனப்படுகொலை என்ற சொற்பதம் காரணமாக சட்ட சிக்கல்கள் ஏற்படும் எனவும் இது நிரூபிக்கப்பட்டு சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே அந்த வார்த்தையை பயன்படுத்த முடியும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
 
இதற்கு பதிலளிக்கையிலே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'இரண்டு இனங்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்டு இரண்டு இனங்களிலும் இழப்புக்கள், நட்டங்கள் ஏற்பாட்டாலே அது இனக்கலவரம்.

 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற அவ்வாறானதொரு இனக்கலவரத்தில் 3000இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது எவ்வாறு இனவழிப்பு இல்லாமல் போகும?. இதனை முன்னால் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம், தந்தை செல்வா ஆகியோரும் ஏற்றுக்கொண்டிருந்தனர் எனக் கூறினார்.

இருந்தும், சிவாஜிலிங்கத்தின் முதல் பிரேரணை சபையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

தொடர்ந்து, 'ஐ.நா விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என்ற இரண்டாவது பிரேரணையை கொண்டு வந்தார். எனினும், இந்த பிரேரணைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர் வைத்தியநாதன் தவநாதன் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

இது குறித்த கருத்து தெரிவித்த தவநாதன் கூறியதாவது, 'மக்களுடைய பணத்தில் நடைபெறும் வடமாகாண சபையில் இவ்வாறான பிரேரணைகளை கொண்டு வந்து, நேரம், மின்சாரம் ஆகியவற்றை வீணாக்கிக்கொண்டு இருக்கின்றோம்.

ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை. இலங்கைக்குள் இருந்துகொண்டு இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு விடயம் தொடர்பாக கதைத்து எவ்வித பயனும் இல்லை.

மேலும், இவ்வாறான பிரேரணைகளை நிறைவேற்றினால் இலங்கைக்கு பங்கம் விளைவிக்கப்படுகின்றது என மத்திய அரசால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நிலைமைகளும் உருவாகலாம்' என எதிர்ப்பு தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், 'தவநாதன் சபையில் வார்த்தையை கவனமாக பிரயோகப்படுத்த வேண்டும்' என எச்சரிக்கை செய்தார்.

இந்த பிரேரணையை வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வழிமொழிய, சபையில் பிரசன்னமாகியிருந்த 26 உறுப்பினர்களி;ல் 25 உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .