2025 ஜூலை 12, சனிக்கிழமை

வடமாகாண ஆளுநர் பதவியிலிருந்து என்னை அனுப்ப முடியாது: ஜி.ஏ.சந்திரசிறி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 11 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், பொ.சோபிகா

தகுந்த காரணங்கள் இல்லாமல் வடமாகாண சபையினர் என்னை மாற்றுவதற்கு முடியாது என வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

அரசியலமைப்புக்கு எதிரான முறையில் நடந்துகொள்ளல், அரச நிதி தவறான முறையில் கையாளப்பட்டல்,  இலஞ்சம், ஊழல்களில் ஈடுபட்டிருத்தல், ஆளுநருக்குரிய ஒழுக்கநெறிகளை மீறுதல் ஆகிய காரணங்கள் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே மாகாண ஆளுநரை மாற்ற முடியும். அதனைத் தவிர வேறு எக்காரணத்திற்காகவும் மாகாண ஆளுநர் ஒருவரை மாற்றுவதற்கு மாகாண சபையினால் முடியாது.

அத்துடன், மேற்கண்ட செயற்பாடுகளை மாகாண சபையினர் ஆளுநரிடம் இனங்கண்டால், அது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி ஜனாதிபதி மூலமே ஆளுநரை மாற்ற முடியும் என்றார்.

மேலும், அரச அதிகாரிகள் விடயத்தை கையாளுதல், அரச அதிகாரிகளுக்கு பதிவு உயர்வு வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் ஆளுநருக்கு உரித்தான உரிமைகள்.

வடமாகாண பிரதம செயலாளர், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர் அவரை கட்டுப்படுத்துவதற்கு வடமாகாண சபையினராலும் ஆளுநராலும் முடியாது.

தற்போது வடமாகாணத்தில் கடமையாற்றும் பிரதம செயலாளர் (விஜயலட்சுமி ரமேஸ்) மிகவும் திறமையானவர். அவர் தனது பணிகளை சிறப்பாக செய்து வருகின்றார் என ஆளுநர் மேலும் கூறினார்.

முதலமைச்சர் நிதியம் அங்கீகரிக்க முடியாது

வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டம் மற்றும் முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் ஆகியவற்றில் முதலமைச்சர் நியதிச்சட்டம் சட்ட வரம்புக்குள் மீறியது என ஆளுநர் குறிப்பிட்டார்.

13ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் உருவாக்கப்பட முடியாது. இருந்தும் வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளேன்.

ஜனாதிபதி அதனை பரிசீலனை செய்த பின்னர், மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைப்பார். அதனைவிட வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட முத்திரை வரி கைமாற்றல் நியதிச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளவதாக உறுதியளித்துள்ளேன்.

நிதிநியதிச்சட்டத்தில் மாற்றங்கள் செய்யுமாறு அனுப்பியபோதும், அவர்கள் சிறு மாற்றங்களை மாத்திரம் செய்து எனக்கு அனுப்பி வைத்துள்ளனர். தான் கூறிய மாற்றங்கள் செய்யப்பட்டபின்னர் நிதிநியதிச்சட்டத்தையும் ஏற்றுக்கொள்வதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

வடமாகாண சபையால் புதிய நிதியங்கள் உருவாக்க முடியாது. வடமாகாண சபையினர் மாகாண சபை நிதியம், மற்றும் அவசரகால நிதியம் ஆகியவற்றை தவிர புதிய நிதியங்கள் எவற்றையும் உருவாக்க முடியாது.

வெளிநாடுகளிலிருந்து உதவி செய்ய விரும்புபவர்கள் மத்திய அரசின் கீழுள்ள திறைசேரிக்கு நிதியை அனுப்புவதன் ஊடகவே உதவிகள் புரிய முடியும். மாறாக நேரடியாக மாகாணத்திற்கு அனுப்பி மாகாண அரசு செலவு செய்ய முடியாது என்று கூறினார்.

அத்துடன், மக்கள் நலன்சார் விடயங்களில் எப்பொழுதும் தடையாக இருக்கமாட்டேன். இருந்தும் அவை சட்டங்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்குவதாக ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .