2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சுயநல அரசியலால் பழிவாங்கப்படும் தமிழர்கள்: சுகிர்தன்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யுத்தத்தால் ஏற்பட்ட காயங்களை சுமந்தபடி, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மனஅழுத்தத்துக்கு மத்தியிலும் வாழ்ந்து வரும் வடக்கு தமிழ் மக்களுக்கு, ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) மேலும் பல அழுத்தங்களை கொடுத்து வருகின்றது என வடமாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சுகிர்தனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கிராமம் தோறும் அரசு மேற்கொண்டு வரும் கிராம அபிவிருத்திக்கான 1 மில்லியன் செயற்றிட்டத்தில், மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் ஈ.பி.டி.பி.யின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் கைவிடபட்டுள்ளார்கள்.

ஈ.பி.டி.பி.யின் பிரதேச அமைப்பாளர்கள், நேரடியாக அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு கட்டளையிட்டு, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாது, தங்களின் ஆதரவாளர்களுக்கும் தங்களால் சிபாரிசு செய்பவர்களுக்கும் மட்டுமே உதவி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த செயற்பாட்டின் மூலம், மீண்டும் ஈ.பி.டி.பி.யின் பக்கச்சார்பு நடவடிக்கை, வெளிச்சம் போட்டு காட்டப்படுகின்றது.

ஏழைகளின் தோழன், மக்களின் விடிவெள்ளி என அரசாங்கத்தின் பணத்தில் வீதிக்கு வீதி பதாகைகளையும், சுவரொட்டிகளையும் வைத்து அரசியல் நடத்தும் மக்களின் ஆதரவற்ற அரசியல்வாதிகளின் முகத்திரை இந்த நடவடிக்கையின் மூலம் கிழிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகளின் பார்வையில் அனைத்து மக்களும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அவ்வாறு நோக்காவிட்டால், அந்த பிரதிநிதிகள் சுயநல அரசியல்வாதிகள் ஆவார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, சேறு பூசிவரும் ஈ.பி.டி.பி.யினர், தங்களின் செயற்பாட்டை திரும்பிப் பார்த்து வெட்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் ஒரு போதும் சலுகைகளுக்கு விலை போகமாட்டார்கள். உரிமைக்காகவே அவர்கள் போராடுகின்றனர். மக்கள் பணத்தில் தங்கள் சுயநலங்களுக்காகவும், தங்களை சார்ந்தவர்களின் நலன்களுக்காகவும் அரசியலை நடத்துபவர்களின் முகத்திரைகள் எதிர்வரும் காலங்களில் மக்களின் வாக்குகளால் கிழிக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .