2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சாட்சியங்களை அனுப்ப தீவிரம் காட்டவும்: சிவாஜிலிங்கம்

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு, சாட்சியங்களை அனுப்பும் நடவடிக்கைளை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சாட்சியங்களை அனுப்புவதற்கான கடைசி திகதி ஒக்டோபர் 30 ஆகும். அதற்கு முன்னர் தீவிரமாக நாம் செயற்பட வேண்டும்' என்றார்.

இங்கிருந்து சாட்சிகளை திரட்டி  அனுப்புவதற்கு இடர்கள் காணப்படுகின்றன. இந்தியா உட்பட புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் இதை ஒரு தமிழ் தேசிய கடமையாக கருதி செய்ய வேண்டும்.

இங்கிருப்பவர்களும் முடிந்தளவு தமது சாட்சியங்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச குற்றங்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தியுள்ளார்கள். இதன்போது, இனப்படுகொலை பற்றி அவர்கள் விசாரணை செய்வார்கள். எனவே அது தொடர்பான சாட்சியங்களை அனுப்ப வேண்டியது எமது கடமை ஆகும். 

வாழ்வாதார அழிப்பு, சிங்கள குடியேற்றம், கட்டாய கருத்தடை, காணி அபகரிப்புக்கள் என்பன இனப்படுகொலைக்குள் உள்ளடங்கும். இதை தடுப்பதற்குரிய  பொறிமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழர்களுக்கு நடைபெற்ற அநியாயங்களுக்கு நீதியும், நிவாரணமும் சர்வதேசத்திடம் கேட்கின்றோம். அத்துடன் இனப்பிரச்சினைக்கு தீர்வும் வேண்டும்.

இனப்படுகொலையை நிரூபிப்பதன் மூலம் உரிய தீர்ப்பு கிடைக்கும். நிவாரணங்கள் கிடைப்பதற்கு தடையாக யாரும் இருக்க வேண்டாம்.

சாட்சியங்கள் அளிப்பதற்கு இன்னும் 42 நாட்களே இருக்கின்ற நிலையில் அனைவரும் சாட்சியங்களை அனுப்புவதற்கு தீவிரமாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்..

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .