2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

காணி அளவீட்டுக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவு கோரப்படும்: சி.வி

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 22 , பி.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமான முறையில் அளவீடு செய்வதற்கு எதிராக நீதிமன்றத்தினூடாக தடையுத்தரவு பெறப்பட்டு நிலஅளவையாளர்களின் காணி அளவீட்டு நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திங்கட்கிழமை (22) தெரிவித்தார்.

சுன்னாகம், சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அரிசி பைகளை வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், 'காணி கையேற்பு சட்டத்தின் கீழ் பொதுமக்களின் காணிகள் பொது தேவைகளுக்காக மட்டுமே சுவீகரிக்க முடியும். மாறாக இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்க முடியாது. எங்கிருந்தோ வந்த இராணுவத்துக்கு வடக்கில் காணிகள் வழங்க முடியாது' என்றார்.

'இராணுவம், இங்கிருந்து வெளியேற வேண்டும். அத்துடன், காணி அளவீடு செய்ய வருபவர்களை தடுத்து நிறுத்துவதற்கு நீதிமன்றத்தினூடாக தடை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்' என்றும் அவர் கூறினார்.

'இலங்கை அரசாங்கம், அபிவிருத்தி நடவடிக்கைகளில் மாத்திரம் அக்கறை செலுத்துகின்றது. மாறாக தமிழ் மக்களின் நலன்களில், தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை விருத்தி செய்வது தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை. இதனால் தமிழ் மக்கள் பெரிதும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

புலம்பெயர் தமிழர்கள் மற்றும் உள்ளுரிலுள்ள நல்லுள்ளம் படைத்தோரின் உதவிகள் மூலமே தமிழ் மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றும் முதலமைச்சர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .