2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடுவதற்கு தீர்மானம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா


எதிர்வரும் கார்த்திகை மாதம் 1 இலட்சத்துக்கும்   மேற்பட்ட   மரக்கன்றுகளை  நடுவதற்கு தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்   ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தார்.

விவசாய அமைச்சரின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற தாவர விற்பனையாளர்களுடனான  கலந்துரையாடலின் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய தாவரங்களினதும் பயன்தரு மரங்களினதும் உற்பத்தியாளர்கள், வண்ண மீன்கள் மற்றும் செல்லப்பிராணிகளுடைய உற்பத்தியாளர்களையும் அழைத்து கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தோம்.

இதுவரை காலமும் இந்த துறை அதிகம் கண்டுகொள்ளப்படாத துறையாக இருக்கின்றது. வடக்கில் கடந்த காலங்களை விட இந்த ஆண்டு வரட்சியை எதிர்கொண்டு இருப்பதற்கு எங்களுடைய தாவரங்கள் அழிக்கப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கின்றது. மரங்கள் கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் எதிர்வரும் கார்த்திகை மாதம் முழுவதும் நாங்கள் மர நடுகை மாதமாக தீர்மானித்துள்ளோம்.

தென்னிலங்கையில் இருந்து கொள்வனவு செய்யாமல் எங்களுடைய மண்ணுக்கு உரித்தான பொருத்தமான மரங்களை நடவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதால் இங்கு இருக்கின்ற மரக்கன்று உற்பத்தியாளர்களை அழைத்து கலந்துரையாடியுள்ளோம்.

அரசாங்கம் விநியோகிக்கும் மரக்கன்றுகள் எல்லாம் தென்னிலங்கையில் இருந்து தான் வாங்கி விநியோகிக்கப்படுகின்றது. அதனால் தங்களுடைய உற்பத்தி பாதிப்படைகின்றது என்று உள்ளூர் உற்பத்தியாளர்கள் முறையிட்டுள்ளார்கள்.

ஆகவே இன்று அவர்களுக்குரிய சங்கம்  ஒன்றை உருவாக்கி 9 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுடன் தொடர்சியாக இயங்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றேன்.

இன்றைய தீர்மானத்தின் படி, கார்த்திகை மாதத்திற்கான மரங்களை அவர்களிடம் கொள்வனவு செய்ய இருக்கின்றோம்.

பொதுமக்களிடையே மரங்கள் மீதான நாட்டத்தை ஏற்படுத்தி இவர்களுக்கான ஒரு விற்பனை பெருக்கத்தை உருவாக்கும் வகையில் மாதாந்தம் கண்காட்சி ஒன்றை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

மலர் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மலர்ப் பண்ணை ஒன்றை அமைக்கவுள்ளோம். அதில் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவுள்ளோம்.

அத்துடன் சங்க இலக்கியங்களில் புகழ் பெற்ற மலரான கார்த்திகை மலரப் பண்ணை ஒன்றையும் மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் வட மாகாண விவசாயப்பணிப்பாளர் சி.சிவகுமார், வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் மற்றும் வட மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த தாவர விற்பனையாளர்களும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .