2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

'ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போது அப்பா காணாமற்போனார்'

Thipaan   / 2014 செப்டெம்பர் 29 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை கிட்ணன் தம்பித்துரை என்ற எனது தந்தை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமற்போயிருந்தார் என அவரது மகன் சாட்சியமளித்தார்.

காணாமற்போனாரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் நடவடிக்கை பூநகரி பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்றது.
இதன்போதே  மகன், தந்தையைக் காணவில்லையென சாட்சியமளித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

எங்கள் அப்பா 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி மணற்காட்டிலுள்ள எங்கள் வீட்டில் இருந்து நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லியடியிலுள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார்.

அத்தருணத்தில் யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தது. எனது அப்பாவை நெல்லியடி மாலுசந்தியில் இராணுவத்தினர் மறித்தனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பின்னாலிருந்த நண்பர் தப்பித்து ஓடினார். எனது அப்பாவை அடித்து ஜீப்பில் ஏற்றி இராணுவத்தினர் கொண்டு செல்வதாக, தப்பித்து ஓடியவர் எங்களிடம் வந்து கூறினார்.

அப்பாவை காணவில்லையென பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தோம். அத்துடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியத்திலும் முறைப்பாடு பதிவு செய்தோம். இருந்தும் எமது அப்பா எங்களுக்கு கிடைக்கவில்லை.

தற்போது எனக்கு 20 வயதாகின்றது. எனது தாய் மற்றும் 3 சகோதரர்களை எனது சம்பாத்தியத்திலேயே பார்த்து வருகின்றேன் என மேலும் கூறினார்.

முன்னரங்கு காவலரணில் வைத்து எனது மகள் காணாமற்போனார்

அம்பலாகாமம் பகுதியில் இருந்த விடுதலைப்புலிகளின் முன்னரங்கு காவலில் நிறுத்தி வைக்கப்பட்ட எனது மகளான கங்கா, இராணுவ சுற்றிவளைப்பின் பின்னர் காணாமற்போனார் என அவரது தந்தை சிவபுண்ணியம் சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

2007ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் எங்களது கறுக்காட்டிலுள்ள வீட்டிலிருந்து எமது மகளை விடுதலைப்புலிகள் கூட்டிச்சென்றனர்.
கூட்டி செல்லும் போது எங்கள் மகளுக்கு 21 வயது. தொடர்ந்து 2009ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் அம்பலாகாமம் முன்னரங்கு காவலரணில் இராணுவ சுற்றிவளைப்பில் எமது மகள் காணாமற்போயுள்ளதாக விடுதலைப்புலிகள் எங்களுக்கு அறிவித்தனர்.
 
அதன்போது, நாங்கள் தர்மபுரம் பகுதியில் இடம்பெயர்ந்திருந்தோம். இதன் பின்னர் எங்கள் மகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .