2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யுத்தத்தில் தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்பினார்கள்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 05 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்


கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக நடந்த யுத்தத்திலும் அதற்கு முந்தைய காலங்களிலும் இலங்கை வாழ் தமிழ் மக்கள், தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்றே நம்பி வாழ்ந்தார்கள் என சட்டத்தரணி க.சே.இரத்தினவேல் தெரிவித்தார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்திஜன் 76ஆவது பிறந்த தினத்தையொட்டிய ஞாபகார்த்த நினைவுப் பேருரை யாழ்.திருமறைக் கலாமன்றம் கலைத்தூது மண்டபத்தில் சனிக்கிழமை (04) மாலை இடம்பெற்றது.

இதில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணையும் தமிழ் மக்களின் எதிர்காலமும் என்னும் தொனிப்பொருளில் இரத்தினவேல் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது,

பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு அரச பணிகளிலும், அரசியலிலும், கல்வித்துறையிலும், தொழில் துறையிலும் மற்றைய விவகாரங்களிலும் ஒருதலைப்பட்சமாக  பாரபட்சத்தையே சந்தித்த மக்கள், அரசியல் வட்ட மேசை பேச்சுவார்த்தைகளும் பலனளிக்காத நிலையில் ஆயுதப் போராட்டத்தினை நாடினார்கள்.

ஆயுதப் போராட்டம் பலமான நிலையில் இருக்கும் வரை மக்களின் எதிர்பார்ப்புகளும் நிலைத்தன. பலமான தளத்தில் நின்று பேரம் பேசும் வாய்ப்பு இருந்தது. அந்த நிலைமையிலும் கூட பெரும்பான்மையினரின் தலைமைகளும், சிங்கள பௌத்த நிலையியல்வாதிகளும் மற்றைய இனங்களுடன் சமரசம் செய்யத்தயாராக இருக்கவில்லை.

சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவை இழக்க விரும்பவில்லை. இந்நிலையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற போது தமிழ்மக்கள் தாங்கள் அதல பாதாளத்தில் இருப்பதை உணர்ந்தார்கள். 

பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்களின் உயிர்கள் மரணிக்கப்பட்டன. இருந்த வீடுகள், நிலங்களை இழந்து,  வாழ்வாதரங்களைப் பறிகொடுத்து, உற்றார் உறவினர்களைக் கண்முன்னாலேயே இழந்து நிர்க்கதிக்குள்ளானார்கள்.

மிகவும் கபடமாகவும் தந்திரமாகவும்  சர்வதேச தொண்டு ஸ்தாபனங்களையும் ஜக்கிய நாடுகள்  நிறுவனங்களையும்  ஊடகவியலாளர்களையும் யுத்த பிரதேசங்களில் இருந்து வெளியேற்றி சாட்சியங்களற்ற யுத்ததினை நிகழ்த்தி, வரலாறு கண்டிராத கொடுமைகளையும் போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும்  அரங்கேற்றியது இலங்கை அரசு.

எஞ்சியிருந்த 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் விலங்குகளைப் போல் முட்கம்பிகளின் பின் அடைக்கப்பட்டு சொல்லெணா கொடுமைகளுக்குள்ளானார்கள். வவுனியாவுக்கு அண்மையிலுள்ள  காடுகள் அழிக்கப்பட்டு அகதி முகாம்கள் என்ற போர்வையில் இம்மக்களை அங்கு வருடக்கணக்காக குடிஅமர்த்திவைக்க திட்டங்கள் ஏற்கனவே தீட்டப்பட்டிருந்தன.

வன்னியில் கனரக வாகனங்கள், புல்டோசர்கள் போன்ற அசுர இயந்திரங்கள் மூலம் மக்கள் செறிவின் அடையாளங்கள் தரைமட்டமாக்கப்பட்டு மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியது.

அதே பூமியில் இராணுவ முகாம்களை அமைத்து இராணுவத்தினரின் உத்தியோக இருப்பிடங்களையும், அவர்கள் குடுப்பத்தினரை குடியேற்றுவதற்காக பின்னர் அவர்களுடைய பிள்ளைகள், சிறுவர்களுக்கான பாடசாலைகள், அலுவலகங்கள், கிராம, நகர குடியிருப்புகள் என்பவற்றையும் உருவாக்கி மக்கள் பரம்பலை மாற்றுவதற்கான திட்டங்கள் செயலாக்கம் பெற்றன.

புத்தர் சிலைகள் காணுமிடமெல்லாம் அமைக்கப்பெற்றன. அனுராதபுரத்திலுள்ள ஒரு பௌத்த ஆலயத்தில் ஆயிரக்கணக்கான புத்தர் சிலைகளும் விக்கிரகங்களும் வன்னிப் பிரதேசத்தின் பற்பல இடங்களில் பிரதிஸ்டை பண்ணுவதற்காக கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.

தமிழ்மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைகளும் இன்னல்களும் சித்திரவதைகளும் இன ஒழிப்பு கைங்கரியங்களும் வெளியுலகத்துக்கு மெல்ல கசியத்தொடங்கின. இதன் விளைவாக  ஐ.நா செயலாளர் நாயகம்  நியமித்த நிபுணர் குழு ஒரு அறிக்கையை சமர்பித்தது. அந்த அறிக்கை சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

உலகளாவில் அங்கீகாரம் பெற்ற சட்ட வல்லுனர்கள், நீதித்துறை, புலனாய்வுத்துறையில் அனுபவம் வாய்ந்த பாரபட்சமற்ற நடு நிலையாளர்கள் அடங்கிய இக்குழு, போரின் இறுதி நாட்களிகளில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் அக்கிரமங்களையும் விவரமாக வெளியிட்டது.

2014 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையிலும் உலகெங்கிலும் வாழ் தமிழ் மக்களுக்கு ஓரளவு மன ஆறுதலை அளித்தது என அவர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .