2025 ஜூலை 14, திங்கட்கிழமை

றோலர் படகுகளால் பாதிப்பில்லை: மீனவர் சங்கம்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 07 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


றோலர் படகு மீன்பிடியால் கடல் வளம் பாதிக்கப்படமாட்டாது என வல்வெட்டித்துறை கிழக்கு கடற்றொழில் சங்கம் விளக்கம் கூறியுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்படி சங்கத்தின் தலைவர் சிவசம்பு சிவகணேஷன், செயலாளர் சி.ஆனந்தஜோதி ஆகியோரே இவ்வாறு விளக்கம் கொடுத்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

இலங்கையின் நீர்கொழும்பு, புத்தளம், மன்னார் போன்ற மாவட்டங்களிலுள்ள மீனவர்கள் றோலர் படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எவ்வித சட்டங்களும் தடை நிற்கவில்லை.

மீன்களை உரிய முறையில் பிடிக்காமல் விட்டால் மாத்திரமே மீனினம் அழியும். எங்கள் படகுகளை நாரா, நெக்டா நிறுவனங்கள் மூலம் ஆய்வுக்குட்படுத்தலாம். ஆய்வில் எங்கள் படகுகளால் கடல் வளம் அழியும் என தெரியவந்தால், நாங்கள் எங்கு தொழில் செய்ய முடியும் என அடையாளப்படுத்த வேண்டும்.

அத்துடன், மீன்களின் இனப்பெருக்க காலங்களை இனங்கண்டு அக்காலங்களில் தடை விதிக்கலாம். அதனை விடுத்து உடனே தடை விதித்தால் எங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றன.
 
இதுவரையில் எங்களுக்கு எரிபொருள் மானியம் உள்ளிட்ட எவ்வித மானியங்களும் வழங்கப்படவில்லை. இன்று எங்கள் தொழிலை தடுத்தமையால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு மாற்று முறைகள் தொடர்பிலும் ஏற்பாடுகள் செய்யவில்லை.

சுனாமிக்கு முன்னர் எங்களிடம் 54 றோலர் படகுகள் இருந்தன. தற்போது 23 படகுகள் இருக்கின்றன.
கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சால் 17 மீன்பிடி முறைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இருந்தும், அது தொடர்பில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் வடமராட்சி மீனவர்களுக்கு அறிவிக்கவில்லை.

யாழ்;ப்பாணத்தில் பாஷையூர், குருநகர் பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எங்களுடைய வடமராட்சி துறைமுகங்கள் அமைக்கப்படவில்லை.

எங்கள் றோலர்களின் அனுமதிப்பத்திரத்தை 3 வருடங்களாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு பறித்து வைத்துள்ளது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .