2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சிங்கள சகோதரர்கள் உரிமை போராட்டத்துக்காக குரல் கொடுக்க வேண்டும்: பொன்னுத்துரை

Gavitha   / 2014 ஒக்டோபர் 12 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

எமது மண்ணை படையினர் மூலம் இலங்கை அரசாங்கம் பறித்து வைத்திருக்கிறது. மண் இல்லாமல் விதை இல்லை. எனவே விதை உரிமை போராட்டத்தில் ஈடுபடும் சிங்கள சகோதரர்கள், எமது மண் உரிமைப் போராட்டத்துக்காவும் குரல் கொடுக்க முன்வர வேண்டும் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விதை உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் முறிகண்டியில் இருந்து கொழும்பை நோக்கி சனிக்கிழமை (11) ஆரம்பித்திருக்கும் பாதயாத்திரையின், தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

விதைகள் தனியொருவருக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ சொந்தமானவை அல்ல. அவை இயற்கைக்கு சொந்தமானவை. இயற்கை எல்லா பிரதேசங்களிலும் அந்தந்த பிரதேசங்களின் காலநிலை, மண்வளம், நீர்வளம் என்பவற்றுக்கேற்ற பயிர்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

அந்த வகையில் எங்களிடமும் வரட்சியை தாக்கு பிடிக்கக்கூடிய, வெள்ளத்தில் மூழ்கினாலும் அழுகி இறக்காத, பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகாத, இரசாயன உரங்கள் தேவைப்படாத சுதேசியப் பயிரினங்கள் ஏராளமாக இருந்தன. ஆனால், பசுமை புரட்சி என்ற பெயரில் கலப்பு இனங்களை பன்னாட்டு நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய பின்னர் எமது பாரம்பரிய இனங்கள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன.

எஞ்சியிருக்கும் ஒரு சில பாரம்பரிய இனங்களையும் பறித்து, பன்னாட்டு நிறுவனங்களிடம் கொடுக்கும் முயற்சியிலேயே அரசு இப்போது இறங்கியிருக்கிறது.

அதற்கு வசதியாகவே விதைகளை சேமித்து வைக்கும் உரிமையை விவசாயிகளிடமிருந்து பறித்து, விவசாயப் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கும் விதத்தில் விதைகள் சட்டமூலத்தில் திருத்த மசோதா ஒன்றை கொண்டுவரவுள்ளது.

மண்ணை இழந்த வலி எங்களுக்கு தெரியும். அதேபோன்றுதான் விதை இழப்பின் வலியும் கடுமையானது. விதைகளை சேமித்து வைக்கும் உரிமை, விவசாயிகளிடம் இருந்து கைமாறினால் எங்களது விவசாயிகள் பாரம்பரிய நெல்லினங்களான பச்சை பெருமாளையோ, மொட்டை கருப்பனையோ வீட்டில் சேமித்து வைத்திருக்க முடியாது. அவ்வாறு செய்தால் கைது செய்யப்படலாம்.

பாரம்பரிய இனங்கள் எல்லாவற்றையும் இழந்த பின்னர் ஒவ்வொரு விதைப்புக்காகவும் பன்னாட்டு நிறுவனங்களிடமே அவர்களின் கலப்பின விதைகளுக்காகவும் மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்காகவும் கையேந்த வேண்டிவரும்.

அவர்களின் இரசாயன உரங்களையும் கிருமிநாசினிகளையுமே வாங்க வேண்டிவரும். இந்த நச்சு இரசாயனங்கள் இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களின் விதைகள் ஒருபோதும் விளைச்சலை தராது. நச்சு இரசாயனங்களால் நாம் மென்மேலும் நோயாளிகளாக வேண்டி வரும்.

எனவே, விவசாயிகளிடமிருந்து விதை உரிமையை பறிக்கும் அரசாங்கத்தின் மசோதாவுக்கு எதிராக தென்னிலங்கை மக்களுடன் சேர்ந்து நாமும் குரல் கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதுமாத்திரமல்லாமல் நாட்டை பாதிக்கும் பொதுவான விடயங்களில் தென் இலங்கை சிங்கள சகோதரர்களுடன் கைகோர்த்து அரசாங்கத்துக்கு எதிராக போராடுவதற்கு நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, விதை உரிமையைப்  பாதுகாத்துக்கொள்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எப்பாவல மகாநாயக்கதேரர் மகமாங் கடவல பிரியரட்ண ஆகியோருடன் தென் இலங்கையில் இருந்தும் கிளிநொச்சியில் இருந்தும் ஏராளமான பொதுமக்களும் விவசாயிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .