2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அதிகார மமதையில் பேசவேண்டாம்: சி.வி

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தன் வசம் அதிகாரம் அனைத்தும் இருக்கின்றது என்ற மமதையில் வாயில் வந்ததை எல்லாம் பேசக்கூடாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினர்.

வடமாகாண நீரியல் ஆய்வு மையத் திறப்பு விழா, தொண்டமனாறு நீர்ப்பாசன திணக்கள வளாகத்தில் புதன்கிழமை (15) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், சில தினங்களுக்கு முன்னர் வட மாகாணத்துக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிளிநொச்சியில் வைத்து, வைக்கோல் பட்டறை நாய் போல வட மாகாணசபை செயற்படுகின்றது என்று கூறியிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

'எம்மை பல விதங்களில் அரசாங்கம் குறை கூறி வருகின்றது. தாம் செய்யும் தவறுகளை மூடி மறைக்க எம்மை சாடுகிறது. ஆரம்பத்தில் நேசக்கரம் நீட்டி எமது மக்களின் வெறுப்பையும சம்பாதித்து கொண்டு எனது உறுதியுரையை எடுக்க ஜனாதிபதியிடம் சென்றவன் நான்.

நாட்டில் சுமூக நிலை ஏற்பட வேண்டும். எமது மக்கள் ஒதுக்கி வைக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் இதை செய்தேன். அதன் பின்னர் எமக்கு தேவையான பல விடயங்களை ஜனாதிபதியிடம் முன்வைத்தேன். அவர் தருவதாக அன்றே உறுதி மொழி கூறி தனது உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை. அந்த ஒரு காரணமே போதும் அவரின் வருகையை நாங்கள் புறக்கணிப்பதற்கு.

ஆனால், அதற்கு மேலும் பல காரணங்களை கூறியே எம்மால் கலந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது என்று மனவருத்தத்துடன் கூறிக் கடிதம் அனுப்பி வைத்தேன். கடிதத்தில் குறிப்பிட்டவற்றை குறிப்பிடாமல், வைக்கோல் பட்டறை நாய் போல வடமாகாண சபையின் செயற்பாடுகள் இருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

வைக்கோல் பட்டறை என்று குறிப்பிட்டது எங்கள் வடமாகாண மக்களை. வடமாகாண சபையை நாய் என்று கூறியுள்ளார். எங்கள் வைக்கோல் பட்டறையின் ஒரு பகுதியை ஒரு சகோதரர் தீ வைத்து பொசுக்கியதால் தான் ஜெனீவாவில் விசாரணை நடக்கின்றது.

மற்றைய சகோதரர், வைக்கோல் பட்டறையை பராமரிப்போம். அதற்காக பத்தும், இருபதும், முப்பதும் தாருங்கள் என்று கேட்டு வருகின்றார். இந்நிலையில், நாங்கள் நாயாக இருந்து வைக்கோல் பட்டறையின் நலம் காக்காது விட்டால் நமக்காக அவரா அல்லது அவரின் குடும்பத்தாரா நன்மை செய்யப் போகின்றார்கள்?. அல்லது நாயாக உழைக்கப்போகின்றார்கள்?.

பிரதம செயலாளரை சட்டப்படி நியமிக்க வக்கில்லாதவர், ஆளுநரை மக்கள் கோரிக்கைப்படி மாற்ற முடியாதவர், அதிகாரம் தன் வசம் என்ற மமதையில் வாயில் வந்ததை எல்லாம் பேசக்கூடாது.

2012இல் நடந்தவற்றுக்கு 2014இல் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வைப்பவர், அதுவும் 2013இல் நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எம்முடன் கலந்தாலோசிக்காமல் கூட்டம் வைப்பவர், எமக்கு நன்மை செய்ய வருகின்றாரா அல்லது ஜனாதிபதி தேர்தலில் தனக்கு நன்மை தேட வருகின்றாரா?.

அவருக்கு வடமாகாணத்தில் உள்ள எவராவது ஒரு தமிழன் வாக்களிப்பான் என்பதே அவரது எதிர்ப்பார்ப்பாகும். எவ்வாறாயினும், அவர் தருவதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால் அவர் உங்களுக்குப் பெருவாரியான நட்டஈடு வழங்க வேண்டியுள்ளது.

அவர் தற்போது தரப்பார்ப்பது அதில் ஒரு மிகச் சிறு தொகை தான். அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் தேர்தலில் அவரை வீழ்த்த உங்களால் முடியுமானவற்றைச் செய்யுங்கள் என்று நாம் எமது மக்களுக்கு கூறியுள்ளோம்.

ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுவது போலத்தான் இருக்கின்றது ஜனாதிபதியின் கூற்று. வட மாகாண மக்கள் மீது கரிசனை இருந்திருந்தால் அவர் எம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து இங்கு வந்திருப்பார்.

நாங்கள் கேட்ட மிகக்குறைந்த கோரிக்கைகளையாவது கொடுத்துவிட்டு வந்திருப்பார். அப்பொழுது நாங்கள் நன்றியுடன் வரவேற்றிருப்போம். நாய்களுடன் அவர் கவனமாக இருக்கட்டும்.

அடுத்ததாக ஓர் அமைச்சர், கருடா சௌக்கியமா? என்று கேட்க தலைப்பட்டுள்ளார். தான் யார், எங்கு இருக்க வேண்டியவர் என்பதை மறந்து பேசியுள்ளார். மு.விக்னேஸ்வரனை ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. மு.விக்னேஸ்வரன் என்றால் முட்டாள் விக்னேஸ்வரன் என்று நான் கூறவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்றே கூற வந்தேன் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் கிண்டல் அடித்துள்ளார்.

நண்பர் டக்ளஸ் அவர்கள் கெட்டிக்காரர் என்பதை நான் ஒத்துகொள்கின்றேன். தென்னிந்தியாவில் பாதுகாப்பாக ஒரு தனியிடத்தில் இருத்தப்பட வேண்டியவர் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் எல்லாவற்றையும் முட்டாள்கள் ஆக்கி அவற்றில் அங்கம் வகித்து தனக்கெதிராக தென்னிந்தியாவில் விடுக்கப்பட்ட பகிரங்க பிடிவிராந்தில் இருந்து இதுவரையில் அவர் தப்பி இருந்து வருவது அவரின் கெட்டித்தனத்தைக் காட்டுகிறது.

அதற்காக அவர், எவரை வேண்டுமானாலும் அடிவருடி, அவர்களுக்கு அடிமையாக செயற்பட்டு தனது காரியத்தினை சாதித்து வருவதையும் நான் அறிவேன். அது பற்றி தம்பி ஸ்ரீதரன் அவர்கள் கூறியதை பத்திரிகையில் வாசித்தறிந்தேன்.

ஆனால் சில நேரங்களில் தம்மைக் கெட்டிக்காரர்களாக அடையாளம் காண்பவர்கள் தாமே முட்டாள்கள் ஆகின்றார்கள். அப்படி ஏதாவது நண்பர் டக்ளஸ்க்கு நடந்தால், இந்தியாவிற்கு அவர் கொண்டு செல்லப்பட்டால் நான் அவரை முட்டாள் என்று அழைக்கமாட்டேன். முதலமைச்சர் என்றும் அழைக்க மாட்டேன். முற்றிலும் முடியாத பரிதாபத்துக்குரிய முன்னாள் அமைச்சர் என்று தான் குறிப்பிடுவேன்.

சிலரை எக்காலமும் ஏமாற்றலாம். பலரை ஒரு சில தருணங்களில் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பதை நண்பர் அறிந்து வைத்திருந்தால் நல்லது' என முதலமைச்சர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0

  • Sumathy M Thursday, 16 October 2014 01:16 PM

    அவர் தருவதாக அன்றே உறுதி மொழி கூறி தனது உறுதிமொழிகளை நிறைவேற்றவில்லை....

    கத்துக்குட்டி விக்கி ஐயா அவர்களே நீங்கள் இராணுவத்தை வெளியேற்றிவிட்டீர்களா?

    ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது
    உண்மைதான்... நீங்கள் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. கடந்த அறுபது வருடங்களில் தமிழ்மக்களுக்கு என்னத்தை பெற்றுக்கொடுத்தீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .