2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அலுவலக திறப்புவிழா

George   / 2014 ஒக்டோபர் 18 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வட மாகாணசபையை கைப்பற்றியிருந்த போதிலும் அவர்களால் மக்களுக்கு இதுவரையில் எவ்விதமான பயன்களும் கிடைக்கவில்லையென வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் புவி தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மன்னார் சாலைக்கான அலுவலக திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு சிறந்த திட்டங்களை வகுத்து அவற்றை திறம்பட செயற்படுத்துவதற்கு முன்னின்று உழைப்பவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே.

ஆனால், தேர்தல் காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட முடியாத பல வாக்குறுதிகளை வழங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபையை கைப்பற்றியிருந்தனர்.

இருந்த போதிலும் இற்றைவரையில் அவர்களால் எமது மக்களுக்கு எவ்விதமான பயன்களும் கிடைக்கவில்லை.  அதுமட்டுமன்றி இனிமேலும் கிடைக்கப் போவதுமில்லையென்பதே யதார்த்தமானதாகும்.

இருந்த போதிலும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிவரும் பணிகள் காத்திரமானது.

அந்தவகையில் வடமாகாணத்திலுள்ள ஏழு சாலைகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பாரிய முயற்சியின் பயனாக 70 பேருந்துகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவ்வாறு நோக்கும் போது போக்குவரத்துச் சேவைகள் மட்டுமன்றி மக்களுக்கான அனைத்து சேவைகளும் சிறப்பாக அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் மக்களினதும் ஊழியர்களினதும் சாலைகளினதும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதுடன் அவை பலப்படுத்தப்பட வேண்டுமென்பதே அமைச்சரின் முக்கிய நோக்காகும் என்றும் சுட்டிக்காட்டினர்.

இதன்போது வடபிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான பிராந்திய பொது முகாமையாளர் அஸ்ஹர் உரையாற்றும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏழைகளின் தோழன் மட்டுமன்றி மிகவும் எளிமையான தன்மை கொண்டவராகவும் காணப்படுகின்றார்.

சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பாகுபாடோ இன, மத, மொழி என்ற வேறுபாடோ இல்லாது நலனே முதன்மை என்று தனது கடமைகளை ஆற்றி வருகின்ற கடமை வீரர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இருந்தபோதிலும் அமைச்சர் அவர்களை பற்றி சில பத்திரிகைகளில் வெளிவருகின்ற செய்திகள் எவ்வளவு உண்மைக்குப் புறம்பானவை என்பதை அவருடன் நெருங்கி பழகும் போது தெரிந்து கொள்ள முடிகின்றது. இந்த நிலையில் எமது சாலைகளில் பேருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட போது, நாம் அவரையே அணுகியிருந்தோம் அதற்கு தற்போது உரிய பலன் கிடைத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதில் வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கத் மன்னார் சாலையின் தலைவர் தனேந்திரா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம்,  வடமாகாண ஜனநாயக போக்குவரத்து ஊழியர் சங்கத் வவுனியா சாலையின் தலைவர் சுரேந்திரன், ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் லிங்கேஸ், ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட உதவி அமைப்பாளர் சந்துரு ஆகியோர் உரையாற்றினர்.

ஆரம்ப நிகழ்வுகளை அடுத்து பெயர்ப்பலகையினை திரைநீக்கம் செய்த அமைச்சர்; அலுவலகத்தை திறந்து வைத்தார்.   இந்நிகழ்வில் மன்னார் நகர சபை உறுப்பினர் டிலான் உள்ளிடட துறைசார்ந்த பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .