2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழ்.போதானா வைத்தியசாலையில் பாரிசவாத நோய் சிகிச்சை வெற்றி

Gavitha   / 2014 ஒக்டோபர் 29 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யோ.வித்தியா
யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதங்களாக பாரிசவாத நோயாளர்களுக்கு வழங்கப்பட்ட  சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக, யாழ். மருத்துவ சங்கம் தெரிவித்தது.
 
உலக பாரிசவாத நோய் தடுப்பு தினமாகிய இன்று, மக்களுக்கு பாரிசவாதம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஊடகவியலாளர் சந்திப்பொன்று  யாழ் போதனா வைத்தியசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (29) நடைபெற்றது.
 
இச்சந்திப்பில், மருத்துவ சங்கத்தை சேர்ந்த தலைவர் வைத்திய கலாநிதி. முரளி வல்லிபுரநாதன், செயலாளர் ஆர்.சுரேந்திரகுமார், உதவி தலைவர் நளாயினி ஜெகதீசன் மற்றும் வைத்திய நிபுணர் கே.அஜந்தா ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.
 
இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
 
இலங்கையில் பாரிசவாத நோயானது புற்றுநோய், மாரடைப்பு ஆகிய நோய்களுக்கு அடுத்ததாக 3ஆவது இடத்தில் உள்ளது. இந்நோய் 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதிக்கின்றது என்றாலும் தற்போது இளவயதினரையும் பாதிக்க தொடங்கியுள்ளது. இலங்கையில் வருடத்துக்கு 25 ஆயிரம் பேர் வரை பாரிசவாத நோயால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
 
இந்நோயானது, உயர்குருதி அமுக்கம், குருதியில் கொழுப்பு தன்மை அதிகரித்தல், இதயத்துடிப்பு குறைதல் மற்றும் நீரிழிவு நோயாளர்களையே அதிகம் பாதிக்கின்றது.  யாழ்.மாவட்டத்தில் தற்போது உப்பு பாவனை அதிகரித்துள்ளது. ஒரு நாளுக்கு 1 தேக்கரண்டிக்கு அதிகமாக உப்பு பாவிக்ககூடாது. ஆனால் இங்கு அதிகமாக உப்பு பாவிக்கப்படுகிறது. உப்பின் பாவனை அதிகரிப்பதாலும் இந்நோய் ஏற்படவாய்ப்புண்டு.
 
இந்நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டு 4 ½ மணித்தியாலயங்களுக்குள், உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் முற்றாக குணப்படுத்தலாம். யாழ். போதனா வைத்தியசாலையில் உடனடியாக சிகிச்சை பெற்ற 12 நோயாளர்கள் தற்போது பூரண குணமடைந்துள்ளதாக அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .