2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஜப்பான் தூதுவர் - சி.வி சந்திப்பு

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கில் இராணுவ முகாம் நிர்மாணிக்கும் நோக்கத்தில் இராணுவத்தினர் காணிகளை கேட்பதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபுகிட்டோ ஹொபுவுக்கு கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜப்பான் தூதுவருக்கு இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (30) மாலை முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

'இராணுவத்தை வடக்கில் குறைத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளதாக தூதுவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான், 'அவ்வாறு இராணுவத்தை வடக்கில் குறைத்திருந்தால் ஏன் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு காணிகளை எங்களிடம் கேட்கின்றார்கள். இராணுவத்தை அகற்றுவதாக கூறும் அரசாங்கம், இராணுவத்தை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று நிலைநிறுத்துகின்றது தவிர அகற்றவில்லையென' கூறினேன்.

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் எவ்வாறான நிவாரணங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என தூதுவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான், 'வீதிகள், புகையிரத பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை எமது கிராம மக்களுக்கு பயன்பெறும் விடயமாக இல்லை. கிராமங்களிலுள்ள குடும்பங்களுக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன' என்றேன்.

'வாழ்வாதார ரீதியில் அவர்கள் பின்னோக்கி இருக்கின்றனர். இராணுவம் இங்கு நிலைகொண்டிருப்பதால் அவர்கள் முன்னேற முடியாமல் இருக்கின்றனர். மக்களின் விவசாய நிலங்கள் இராணுவத்தினர் வசம் இருக்கின்றன. மேலும் மீன்பிடியிலும் இராணுவம் தலையிடுகின்றது.

தெற்கிலுள்ள மீனவர்கள் அத்துமீறி இங்கு வந்து மீன்பிடியில் ஈடுபடுவதுடன் அவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு எமது கடல் வளத்தையும் அழிக்கின்றனர். இதனால் மக்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்யவேண்டிய கடப்பாட்டில் நாங்கள் இருப்பதாக' தூதுவருக்கு எடுத்துக்கூறினேன்.

மேலும், சுன்னாகம் மின்சார நிலைய எண்ணெய் கழிவு நிலத்தில் ஊற்றப்பட்டமையால் சுன்னாகம் தொடக்கம் மானிப்பாய் வரையிலான கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தூதுவருக்கு தெரிவித்தேன். அனைத்து கிணறுகளிலும் எண்ணெய் கழிவு கலந்துள்ளதாக தெரிவித்தேன்.

அதற்கு அவர், நிபுணர்கள் குழுவின் உதவிகள் மூலம் உடன் நடவடிக்கை எடுக்க உதவுவதாகவும், அதற்கு இந்த பிரச்சினைகள் தொடர்பில் சகல விடயங்களையும் தங்களுக்கு தெளிவுபடுத்தும்படி அவர் என்னிடம் கோரியிருந்தார்.

அதற்கு நான், வடமாகாண அமைச்சர்கள் மூலம் இந்த பிரச்சினையை மத்திய அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தி, உங்கள் மூலமான உதவிகளை பெற நடவடிக்கை எடுப்போம் எனக்கூறினேன்.

தூதுவர் கிணறுகள் மாசுபடுதல் தொடர்பில் அதிகம் வியப்படைந்ததுடன், உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .