2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

காடுகளை அழித்து இராணுவத்தினர் குளிர் காய்கின்றனர்: சி.வி

Gavitha   / 2014 நவம்பர் 02 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


எமது பிரதேசத்திலிருந்த காடுகளை அழித்து அவ்விடங்களில் இராணுவத்தினர் கடைகள், முகாம்களை அமைத்து குளிர் காய்ந்து வாழ்ந்து வருகின்றனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு வடமாகாண மரநடுகை மாத அங்குரார்ப்பண நிகழ்ச்சி, ஊர்காவற்றுறை, நாரந்தனை கணேச வித்தியாலயத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'கடந்த சில வருடங்களாக மழை வீழ்ச்சியில் எமது பிரதேசங்கள் பின்னடைவை சந்தித்து வந்துள்ளது. அதற்கான முக்கிய காரணம் எம்மால் தறித்து, வெட்டி அப்புறப்படுத்தப்பட்ட பல நீண்ட கால மரங்களே ஆகும்.

முன்னெல்லாம்  ஏ - 9 வீதியால் வரும்போது அடர்ந்த காடுகள் தெருவின் இரு பக்கமும் இருப்பதைக் காணலாம். வானளாவும் மரங்களை கண்டு எம்மனங்கள் குதூகலிப்பன. இப்பொழுதோ நிலைமை மாறிவிட்டது. மரங்கள் பல தறித்து, வெட்டி எடுத்து போயாகிவிட்டது. போரின் உக்கிரம் சில இடங்களில் மரங்களை பொசுக்கி பட்ட மரங்களாக்கி விட்டன.

ஏ - 9 வீதியில் மரங்கள் இருந்த இடங்களில் இராணுவக்கடைகளும் இராணுவ முகாம்களும் காணப்படுகின்றன. அத்துடன் அவர்கள் கொண்டு வந்து குடியேற்றிய அன்னியர்களும் குடியிருக்கின்றார்கள்.

எனவே, நாம் எமது வன மரங்களின் செறிவை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. அழிக்கப்பட்ட மரங்களுக்கு ஈடாகப் புதிய மரங்களை வளர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அரசாங்கம், நவம்பர் 15ஆம்; திகதியை தேசிய மரம் நாட்டு நாளாக பிரகடனப்படுத்தியுள்ளது. நாமோ இந்த மாதம் முழுவதையுமே மரம் நடுகை மாதமாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.

எமது வரலாற்றில் இம்மாதத்துக்குரிய பக்குவத்தை மரம் நாட்டி பறைசாற்றுகின்றோம். மனிதன் மரங்கள் தறித்து, நிலத்தில் மண் நிரப்பி, மாட மாளிகைகள் அமைப்பதால், அவன் சுயநலத்துடன் வாழலாம்.

ஆனால், சுற்றுச்சூழலுக்கு அவன் பகைவன் ஆகின்றான் என்பதை நாம் மறத்தல் ஆகாது. இதனால்தான், பலர் பலவித பாரிய தொழில் அகங்களை தோற்றுவிக்க எம்மை நாடி வந்திருந்தாலும், நாம் மிகக்கவனமாக, அவதானமாக அவற்றின் சுற்றுச்சூழல் பாதிப்பை பற்றிக் கவனித்து பார்த்தே உள்வர உதவுகின்றோம்.

பாரிய தொழில் அகங்கள் பலருக்கு வாழ்வாதாரங்களை வழங்குவன என்பது உண்மைதான். ஆனால் குறுகிய கால நலன்களையே குறியாக வைத்து, வருங்கால சந்ததியினரை நாம் வருத்தத்தில் ஆழ்த்திவிடக்கூடாது.

ஏற்கெனவே எமது நிலங்கள், சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் ஆகியவை மாசடைந்துள்ளன. உதாரணத்துக்கு, மின்சாரம் வேண்டுமென்றதால் பாரிய எண்ணெய் தேக்க கிடங்குகளை சுன்னாகத்தில் வடிவமைத்ததால், இன்று எண்ணெய்யானது நிலத்தினுள் கசிந்து சென்று, சுன்னாகத்தில் மட்டுமல்ல மல்லாகத்துக்கு அப்பாலும் நிலத்தடி நீரை மாசுபடுத்தியுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்னர் இது பற்றி நான் ஜப்பானிய தூதுவருக்கு விபரித்தேன். உடனே அவர் அந்த மாசுபதலை சீர்திருத்த, போதிய தொழில்நுட்பத்திறன், தற்காலத்தில் உண்டு என்றும் தங்களுடைய அரசாங்கம் எமக்கு உதவ முன்வரும்.

வேலைப்பளுவில் நான் மறந்து விட்டாலும் எமது வேட்டிகட்டும் வேளாண்மை அமைச்சர் எனக்கூடாக அந்த வேற்றுநாட்டு தூதுவரின் உதவியை பெற ஆவன செய்வார் என்று நம்புகின்றேன்.

நிலத்தின் அடியில் மாசுடன் வாழ்வது நிந்தைக்குரிய ஒரு நிலை. நிபுணர்கள் உதவியுடன் ஒரு நிரந்தரத் தீர்வு இந்த நிலத்தடி மாசுக்கு நாம் காண வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .