2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தற்காலிகமாக மூடப்பட்ட உற்பத்தி நிலையங்கள் திறக்கப்படவில்லை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 09 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தற்காலிக மூடப்பட்ட ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில் 29 ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் திறக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்ட விடயமானது உண்மையில்லையென யாழ். மாவட்ட உப உணவு மற்றும் குளிர்பான உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் மு.உதயசிறி ஞாயிற்றுக்கிழமை (09) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

யாழ்.மாவட்டத்திலுள்ள 59 ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் வடமாகாண சுகாதார திணைக்களத்தால் தற்காலிகமாக மூடப்பட்டமை அனைவரும் அறிந்த விடயம்.

மலத்தொற்று, கிருமிதொற்று, சுகாதார நடைமுறைகள் பின்பற்றவில்லை உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டு ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டன. இருந்தும் கூறப்பட்ட காரணங்கள் உரிய முறையில் நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று ஞர்யிற்றுக்கிழமை (09) 29 ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதில் எவ்வித உண்மையும் இல்லை. இன்று திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 29 ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில், சுகாதார பரிசோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கின்றன 12 நிறுவனங்கள் இருக்கின்றன.

அதனைவிட, பாரிய ஐஸ்கிறீம் நிறுவனங்களின் கிளை நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையங்களையே மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக வடமாகாண சுகாதார திணைக்களம் கணக்கு காட்டியுள்ளார்கள்.

இந்த அறிவித்தலானது நாளை திங்கட்கிழமை (10) நடைபெறவுள்ள எங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை முடக்கும் செயலாகும்.

பரிசோதனை நடவடிக்கைகளால் தற்காலிகமாக மூடப்பட்ட சிறு ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்களாகிய 59 உற்பத்தி நிலையங்களும் மீண்டும் இயங்குவதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால், திட்டமிட்டபடி நாளை திங்கட்கிழமை (10) தங்கள் போராட்டம் யாழ்.துரைப்பா விளையாட்டரங்கிலிருந்து முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .