2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பள்ளத்தை நிரவுவதற்கே குப்பைகளை கொட்டுகின்றோம்: பிரதேச சபை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 13 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், கீரிமலை சீமெந்து தொழிற்சாலைக்கு பின்பக்கமாகவுள்ள தாழ்வான நிலப்பரப்பை உயர்த்தும் நோக்கிலே அப்பகுதியில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் இன்று வியாழக்கிழமை (13) தெரிவித்தார்.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பின்புறமாக உள்ள பள்ளமான பகுதியில் முன்னர் வலி வடக்கு பிரதேச சபை குப்பைகள், கழிவுகளை மற்றும் மலக்கழிவுகளை கொட்டி வந்தனர். தொடர்ந்து வலி.வடக்கு பிரதேச சபையின் அனுமதியுடன் வலி.தெற்கு பிரதேச சபையும் குப்பைகள், கழிவுகளை அப்பகுதியில் கொட்டி வருகின்றனர்.

இதனால், அதனை அண்டிய தேவபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு குப்பைகள் கொட்டப்படுவதால், தாம் சுவாச ரீதியாக பாதிக்கப்படுவதுடன், தொற்று நோய்கள் பரவக்கூடிய தன்மை காணப்படுவதாகவும் அக்கிராம பொதுமக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், குப்பைகள், கழிவுகளுடன் மலக்கழிவுகளும் அவ்விடத்தில் கொட்டப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்தனர். மலக்கழிவுகளால், நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக அம்மக்கள் விசனம் தெரிவித்தனர்.

பிரதேச சபைகள் மாத்திரமல்ல, இராணுவத்தினரும் கடற்படையினரும் தமது கழிவுகளை அவ்விடங்களில் கொட்டி வருவதாகவும் பொதுமக்கள் குறை கூறினார்கள். மேற்படி பிரதேசத்தின் ஆளுகையை வைத்துள்ள வலி.வடக்கு பிரதேசசபையின் தவிசாளரை தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தாழ் நிலத்தை நிரப்பும் பொருட்டே குப்பைகள் கொட்டப்படுகின்றன. மேலும் வலி.தெற்கிலிருந்து வரும் குப்பைகள், கழிவுகள், மலக்கழிவுகள் என்பன சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் இருந்து எடுக்கப்படும் கழிவுகளாகும்.

அந்த நலன்புரி நிலையத்தில் வலி.வடக்கு மக்கள் வசிப்பதால் அம்மக்களின் குப்பைகள், கழிவுகள் மற்றும் மலக்கழிவுகளை சீமெந்து தொழிற்சாலைக்கு பின்புறமாக கொட்டுவதற்கு அனுமதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .