2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

'சபாதிப்பிள்ளை முகாமை மக்களின் நிரந்தர குடியிருப்பாக மாற்ற முயற்சி'

George   / 2014 நவம்பர் 15 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களை அவ்விடங்களிலேயே நிரந்தரமாக குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலி. வடக்கு மீள்குடியேற்ற குழுத்தலைவர் ச.சுகிர்தன் குற்றஞ்சாட்டினார்.

யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுகிர்தன் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

வலி. வடக்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கென நில அளவையாளர் திணைக்களத்திற்கு புதிய சிரேஸ்ட நிலஅளவையாளராக எச்.டி.எம்.கல்தேர நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறப்பாக காணி சுவீகரிப்பதற்கான நிலஅளவை பணிகளை முன்னெடுத்தவர்.

அவர் 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதிக்குள் நிலஅளவை பணிகளை முடிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்.

வலி. வடக்கிலுள்ள 6381 ஏக்கர் காணிகளை இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை தேவைகளுக்கான சுவீகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான வரைபடம் ஏற்கனவே கீறப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வலி. வடக்கு காணிகளை சுவீகரிக்கும் பொருட்டு வரைபடங்கள் நிலஅளiவாயாளர்களால் கீறப்பட்டன.

இருந்தும், அதனை தற்போது அதாவது 2013 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி கீறப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வர்த்தகமானி அறிவித்தல் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களை, அந்தந்த நலன்புரி நிலைய காணிகளுக்குள் நிரந்தரமாக குடியேற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

அந்த காணிகள் தனியார்களுக்கு சொந்தமான காணிகள். அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் நலன்புரி நிலைய மக்களுக்கு கொடுத்துள்ளனர்.
அவர்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அதேபோல் வலி. வடக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த வேண்டும் என்பதையும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

எதிர்வரும் 16 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணத்தின் 12 இடங்களில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் நிலஅளவை பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மக்களின் காணிகளை மக்களிடம் கொடுத்து, மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் யாழ். மாவட்ட படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா ஆகியோரை கோருகின்றோம் என சுகிர்தன் மேலும் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .