2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பொசிவு நீர்ப்பாசன முறை வெற்றி

George   / 2014 நவம்பர் 15 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ். மாவட்டத்தில் உள்ள வரண்ட பிரதேசங்களில் இலகுவான முறையில் தாவரங்களை வளர்ப்பதற்குரிய நீர்ப்பாசன முறையாக  பொசிவு நீர்ப்பாசன முறை காணப்படுவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், சனிக்கிழமை (15) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 

நீரினுடைய வினைத்திறனான பயன்பாட்டின் மூலம் தாவரத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கு ஒவ்வொரு துளி நீரில் இருந்தும் அதி கூடிய உற்பத்தி பெறக்கூடிய தொழில்நுட்பத்தை பெறுவதற்கு பொசிவு நீர்ப்பாசன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறை பல்லாண்டு பயிர்களுக்கும் இலை, மரக்கறி வகைகளுக்கும் சிறந்த பயனளிக்கக்கூடியதாகும். 2012ஆம் ஆண்டு நெடுந்தீவு, மிருசுவில் ஆகிய பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

இதை நடைமுறைப்படுத்துவதற்கு குடியிருப்பாளர்களுக்கு ஒட்டு மாங்கன்றும் பொசிவு நீர்ப்பாசனத்திற்கு விசேடமாக தயாரிக்கப்பட்ட மட்பானைகளும் வழங்கப்பட்டன.

மர கன்றுகள் நடுகை செய்யப்பட்டு அவற்றின் வேர்த்தொகுதிக்கு இரு பக்கங்களிலும் பானையின் கழுத்துப்பகுதி வெளியில் தெரியக்கூடியதாக மட்டும் நிலத்தில் புதைத்து வைக்கப்படும்.

தாவரத்திற்கு தேவையான நீர் மட்பானைக்குள் மட்டும் ஊற்றி மூடி வைக்கப்படும். உரம் தேவைப்படின் நீருடன் கலந்துவிடலாம். இதன் மூலம் பானையில் இருந்து கசிந்து வரும் நீரை பெற்று தாவரம் விரைவாக வளர்ச்சி பெறும்.

2012 ஆம் ஆண்டு பரிசோதனை செய்யப்பட்ட மரங்கள் தற்போது வளர்ந்து அதிக காய்களை உருவாக்கியுள்ளது. இதனுடைய பெறுபேற்றை ஏனையவர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு மிருசுவில் கடந்த 6ஆம் திகதி நடைபெற்றது.

இச் செய்கையை வரண்ட பிரதேசங்களில் மேலும் ஊக்குவிப்பதற்கு செயன்முறை, விளக்கங்கள் விரிவுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .