2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

உரிமையாளரின் சம்மதத்துடன் மாதகலில் காணி அளவீடு

George   / 2014 நவம்பர் 19 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

மாதகல் யோதிப்புலம் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான 4.2 பரப்பு காணி, உரிமையாளரின் சம்மதத்துடன் நில அளவை திணைக்கள அதிகாரிகளால் புதன்கிழமை (19) காலை அளவிடப்பட்டுள்ளது.

கடற்படை முகாம் அமைக்கும் நோக்கில் சுவீகரிக்கும் பொருட்டு இந்த காணி அளவீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த காணி கடற்படை முகாம் தற்போது அமைந்துள்ள பகுதியில் அமைந்துள்ளது. காணி அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள கடற்படையினர் நிலஅளவையாளர்களுக்கு உதவியிருந்தனர்.

இது தொடர்பாக யாழ் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது,

மாதகல் காணி அளவீடு தொடர்பாக தனக்கு எந்தவிதமான முன்னறிவித்தலும் தரப்படவில்லை என்றும் இது தொடர்பாக  சம்பந்தப்பட்டவர்கள் எவரும் என்னுடன் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக வலிவடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் கூறுகையில்,

காணி உரிமையாளரின் தந்தையின் சம்மதத்துடன் குறித்த காணி அளவிடப்பட்டதனால் காணி அளவீட்டை தடுக்க முடியவில்லை.
காணிக்கு சொந்தகாரர் கிளிநொச்சியில் இருப்பதால் அவருடன் உடனடியாக தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.

அத்துடன் எவ்வாறு சம்மதம் பெறப்பட்டது என விளக்கம் கூறமுடியாத நிலையில் காணி உரிமையாளரின் தந்தை இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் கருத்துக் கூறுகையில்,

கடற்படை முகாம் அமைந்துள்ள காணியில் தான் இந்த காணியும் அமைந்துள்ளது. குறித்த காணியின் ஒருபக்கம் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியும், மறு பக்கம் மயான காணியும் அமைந்துள்ளன.

கடற்படை முகாம் அமைப்பதற்கு கடற்படையினர் கேட்டதுக்கமைய காணி உரிமையாளர் காணியை வழங்குவதற்கு 3 வருடங்களுக்கு முன்னர் சம்மதித்திருந்தார்.

எனினும், சம்மதம் தெரிவித்த சில காலங்களில் காணி உரிமையாளர் தனது காணியின் உறுதியை கிளிநொச்சியிலுள்ள மகனின் பெயரிற்கு மாற்றி எழுதியுள்ளார்.

3 வருடங்களுக்கு முன்னர் கொடுத்த சம்மதக்கடிதத்தின் அடிப்படையில், நிலஅளவையாளர்கள் தற்போது காணி அளவீட்டை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த காணி அளவீடு தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் வடமாகாண சபையில் கருத்துக்கூறியிருந்தார்.

'மாதகலில் அமைந்துள்ள காணியானது உரிமையாளருடைய சம்மதத்துடன் புதன்கிழமை (19) அளவீடு செய்யப்பட்டுள்ளது. சம்மதம் எவ்வாறு பெறப்பட்டது என்பது தொடர்பில் எமக்கு விபரங்கள் தெரியவில்லை.

மக்களிடம் நாம் விநயமாக கேட்டுக்கொள்வது என்னவென்றால், இராணுவத்திற்கோ, கடற்படைக்கோ அல்லது விமானப்படைக்கோ உங்கள் காணிகளை வழங்காதீர்கள். அவர்கள் உங்களை மிரட்டியோ, பணம் தந்தாலோ அல்லது சலுகைகளை காட்டியோ காணிகளை அபகரிக்க முயல்வார்கள்.

அவ்வாறான செயற்பாடுகளுக்கு துணை போகாதீர்கள்' என கஜதீபன் மேலும் தெரிவித்தார்.   

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .