2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் மன்னார் மக்கள் அவதி

Menaka Mookandi   / 2014 நவம்பர் 20 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள பெந்தகோஸ்த தேவாலயத்துக்கு  பின்புறத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழிற்சாலையில் இருந்து நாளாந்தம் பாரிய துர்நாற்றம் வீசி வருவதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களால் அரச அலுவலகங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில், பாதிக்கப்பட்ட மக்களும், மன்னார், எழுத்தூர், பெரியகாமம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும் மன்னார் நகரசபை, மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேசச் செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட மத்திய சுற்றாடல் அலுவலகம் ஆகியவற்றிடம் எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையானது கழிவு மீன்களை பதப்படுத்தி கோழித்தீன் தயாரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது. மீன்களை அவித்து பதப்படுத்தும் போது அப்பகுதியில் பாரிய துர்நாற்றம் ஏற்படுகின்றது.

அப்பகுதியில் உள்ள பெரியகாமம் உட்பட பல கிராமங்களில் இந்த துர்நாற்றத்தின் தாக்கத்தினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது குறித்த தொழிற்சாலை நிர்மாணிப்பதற்கான கட்டிட அனுமதி, மன்னார் நகர சபையில் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

அதேவேளை, தொழிற்சாலைக்கான அனுமதி சுற்றுச்சூழல் திணைக்களத்திடம் பெற்றுக்கொள்ளாத நிலையில் இந்த தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டு செயற்பட்டு வருவதாக பெரியகாமம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையிலான குழுவினர், குறித்த தொழிற்சாலையை நேற்று (19) நேரில் சென்று பார்வையிட்டதோடு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .