2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மரணதண்டனை விதிக்கப்பட்ட யாழ். மீனவர்களையும் விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

Thipaan   / 2014 நவம்பர் 20 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மரணதண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மண்டைதீவை சேர்ந்த மூன்று மீனவர்களையும் பாரபட்சம் இன்றி விடுதலை செய்ய வலியுறுத்தி முற்போக்கு தமிழ் தேசிய கட்சியும் ஜனநாயக தேசிய முன்னணியும் இனைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை  இன்று(20) அனுப்பிவைத்துள்ளனர்.

முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் தலைவர்  எஸ்.விஜயகாந் மற்றும்    ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர்         ந.குமாரகுருபரன்  ஆகியோரே இக்கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர்.                                                                                  

 கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி நெடுந்தீவு கடற் பகுதியில் வைத்து போதைப் பொருள் கடத்தினார்கள் என்ற குற்றச் சாட்டின் பெயரில் கைதுசெய்யப்பட்ட, தென் இந்திய மீனவர்கள் ஐவர் மற்றும் யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியைச் சேர்ந்த மூன்று இலங்கை மீனவர்கள் உட்பட 8 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவ்வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.    இந்த நிலையில் கடந்த மாதம் 30ஆம் திகதி; 8 மீனவர்களுக்கும் மேல் நீதிமன்றத்தால் மரணதண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது தாங்கள் அறிந்த விடயமே.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட தென் இந்திய தமிழ் கடற்தொழிலாளர்கள் ஐவரையும் தாங்கள் தங்களின் கீழ் இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ததை முற்போக்கு தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக தேசிய முன்னணி; ஆகிய நாம் வரவேற்கின்றோம்.

ஆனால், யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் கமல்கிருஸ்டி, துஷாந்தன், கிறிஸ்துராஜா ஆகிய 3 தொழிலாளர்களுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யாதது எமக்கு மிகவும் வேதனை அளிப்பதுடன் அவர்களுடைய குடும்பங்களுக்கும் வட மாகாண கடற்றொழிலாளர்களுக்கும் மிகுந்த மனவருத்தத்தை அளித்திருக்கின்றது.

எனவே எமது சகோதரர்களுக்கும் கருணை அடிப்படையில் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட வேண்டும் என கடற்றொழிலாளர்கள் சார்பாக தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன், மேற்படி 3 தொழிலாளர்களின் குடும்பங்கள் அன்றாட வாழ்க்கையைக் கொண்டுசெல்ல முடியாமல்  வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற நிலமையிலும் தங்களுடைய அப்பா விடுதலை பெற்று வந்து விடுவார் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் அவர்களுடைய பிள்ளைகள் காத்திருக்கின்றார்கள்.

 எனவே 3 தொழிலாளர்களின் விடுதலை என்பது அந்த  குடும்பங்களின் சுபீட்சமான எதிர்கால வாழ்வுக்கு வித்திடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

 இந்த விடயத்தில் எந்தவித பாராபட்சமும் இன்றி தென் இந்திய கடற்தொழிலாளர்களிற்கு அளித்த கருணை பொதுமன்னிப்பு போல் எமது தொழிலாளர்களுக்கும் வழங்கும்படி தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
      




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .