2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வடமாகாண தபால் சேவை விரைவு

George   / 2014 நவம்பர் 23 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் - கொழும்பு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வடமாகாணத்துக்கான தபால் சேவையானது விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் நல்லதம்பி இரட்ணசிங்கம், ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

புகையிரத சேவைகள் பளை வரையில் இடம்பெற்று வந்த போது பளை புகையிரத நிலையத்தில் தபால், பொதிகள் இறக்கப்பட்டு, அங்கிருந்து வாகனம் மூலம் யாழ்ப்பாண புகையிரத நிலையம் கொண்டு வரப்பட்டு தபால் மற்றும் பொதிகள் விநியோகம் செய்யப்பட்டன. 

தற்போது, யாழ்ப்பாணம் வரையில் புகையிரத சேவைகள் இடம்பெறுவதால், பொதுமக்கள் தங்கள் தபால்கள் மற்றும் பொதிகளை வெகுவிரைவில் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இருந்ததைவிட தற்போது புதிய தொழில்நுட்பங்கள் ஊடாக வடபகுதி மக்களுக்கு சேவைகளை வழங்கக்கூடியதாகவுள்ளது.

அஞ்சல் திணைக்களமானது, தனது பாரம்பரிய சேவையை சற்றே விரிவுபடுத்திய வகையில் பொதி பரிமாற்றல் சேவையை மேற்கொள்கின்றது.
இந்த சேவையை பொதுமக்கள் வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

வீட்டிலிருந்தவாறே, அஞ்சல் திணைக்கள ஊழியர்களிடம் பொதிகளை அனுப்பவும் முடிகின்றது. இதற்காக தனியான ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்கள் வீடுகளுக்கு வந்து பொதிகளை பெற்றுச்செல்வார்கள்.

அதேபோல், வீடுகளுக்கு கொண்டு சென்று பொதிகளை விநியோகிக்கின்றனர்.

உள்நாட்டு பொதி பரிமாற்றல் சேவையில், 250 கிராமிலிருந்து 500 கிராம் பொதிக்கும் 165 ரூபாயும், 500 கிராமிலிருந்து 1 கிலோவுக்கு 195 ரூபாயும் அறவிடப்படுகின்றது. நிறைகள் அதிகரிக்க பொதிகளுக்கான கட்டணங்கள் மாறுபடும்.

அத்துடன், மேலுமொரு புதிய சேவையாக பரீட்சை கட்டணங்களை இணையத்தளத்தின் ஊடாக பரீட்சார்த்திகள் செலுத்துவதற்குரிய வலையமைப்பு சேவையும் கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து செயற்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .