2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இடைநிறுத்தப்பட்டிருந்த பாடங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

Super User   / 2014 டிசெம்பர் 01 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எஸ்.குகன்

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டிருந்த சங்கீதம், நடனம், நாடகமும் அரங்கியலும் மற்றும் சித்திரம் போன்ற அழகியல் பாடங்களை அடுத்த ஆண்டு முதல் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க போவதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் முத்தமிழ் விழா திங்கட்கிழமை (01) கல்லூரியில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனi தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'கல்வியற் கல்லூரியின் வளங்களை மேலும் நிறைவு செய்து சிறப்பான வளங்களோடு இயங்குவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

கல்விசாரா ஊழியர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதை போன்று ஏனைய பிரச்சினைகளுக்கும் கல்வியமைச்சுடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்று தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அதுமட்டுமன்றி இடைநிறுத்தப்பட்டிருந்த அழகியல் பாடநெறிகளை 2015 ஆம் ஆண்டு முதல் மீண்டும் ஆரம்பித்து செயற்படுத்தும் அதேவேளை, மேலும் பல சிறப்பான வளங்களை பெற்றுக்கொடுத்து புதிய மெருகூடன் இக்கல்லூரியை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

கலை கலாசாரங்களை பின்பற்றுவதற்கு அல்லது தொடர்வதற்கு அமைதியான சந்தோசமான சூழல் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த சமூகத்தின் கலை, கலாசார பண்பாடுகளை பாதுகாத்து கொள்ள முடியும்.

இவ்வாறானதொரு சூழல் இல்லாதபோது, கலை கலாசாரங்களை பாதுகாக்க முடியாது என்பதை கடந்த கால தேவையற்ற அழிவு யுத்தத்தில் காணமுடிந்தது.

இன்று ஓர் அமைதியான சூழல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த கால தமிழ் அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தல்களால் தான், எமது மக்கள் இழப்புகளையும் இடப்பெயர்வுகளையும் சந்திக்க நேர்ந்தது.

அவ்வாறானதொரு நிலை எதிர்காலத்திலும் நிகழாத வண்ணம் பார்த்துகொள்ள வேண்டும்.  எமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்வதற்கும் நாம் முயற்சிக்க வேண்டும். 

முன்னைய அரசுகள் எம்மை மாற்றான் தாய் பிள்ளையாக நோக்கியிருந்த போதிலும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு பின்னர் அந்த நிலை மாற்றப்பட்டிருந்தது.

அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே முள்ளிவாய்க்கால் வரை எமது மக்கள் அவலங்களை சந்தித்திருந்தனர்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .