2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மட்டுப்படுத்திய அளவில் காணிகள் விடுவிப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 20 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றெசாந்த்

யாழ்ப்பாணம், உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட வசாவிளான் பிரதேசத்திலுள்ள தங்களது காணிகளை இன்று வெள்ளிக்கிழமை (20), பார்வையிடச் சென்ற பொதுமக்கள் அக்காணிகளை காணிகளை பார்வையிட முடியாமல் ஏமாற்றமடைந்ததாக அங்கு சென்ற மக்கள் தெரிவித்தனர்.

வசாவிளான் பகுதியில் ஜே - 244, மற்றும் ஜே - 252 ஆகிய கிராமஅலுவலர் பிரிவுகளுக்கு உட்பட்ட காணிகள் விடுவிக்கப்படும் என்ற செய்தியை அடுத்து, அக்காணிகளின் உரிமையாளர்கள் தங்கள் காணிகளை அடையாளப்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை (20) காலை பிரதேச செயலாளர் தலைமையில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

தென்மூலை, வடமூலை, தோலகட்டி ஆகிய இடங்களுக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஒட்டகப்புலத்தில் ஒரு பிரதேசமும், பலாலி தெற்குப் பகுதியில் சிறிதளவு இடமும் மாத்திரம் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

400 குடும்பங்களின் 197 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என நம்பிச் சென்ற பொதுமக்களில் பலர் தங்கள் காணிகளுக்குச் செல்ல முடியவில்லை. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களின் காணிகளை பார்வையிடச் சென்றவர்கள் பயணித்த வீதியின் நடுவில் இரண்டு பக்கமும் இராணுவத்தினர் முட்கம்பி வேலைகளை போட்டுள்ளனர்.

இதனால் குறுகிய வீதியூடாக பொதுமக்கள் 2 கிலோமீற்றர் தூரம் அழைத்துச் செல்லப்பட்டு, தங்கள் காணிகளின் பின்பக்கம் வழியாக சென்றே காணிகளை பார்வையிட்டனர்.

காணிகளை பார்க்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்: சுரேஸ் எம்.பி

தமது காணிகளை பார்க்க என ஆவலுடன் வந்த மக்களை அழுகுரலுடன் இராணுவத்தினர் திருப்பி அனுப்பி விட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

வசாவிளான் பகுதியில் 197 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதையடுத்து, தங்கள் காணிகளை அடையாளப்படுத்துவதற்காக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் வெள்ளிக்கிழமை (20) அழைத்துச் செல்லப்பட்டனர்.

எனினும் அம்மக்கள் முழுமையாக தங்கள் காணிகளை அடையாளப்படுத்த முடியாது திரும்பினர். மக்களுடன் சென்றிருந்து சுரேஸ் ஊடகங்களுக்கு கருத்து கூறியதாவது,

வசாவிளான் கிழக்கு ஜே - 244 கிராமஅலுவலர் பிரிவிலுள்ள 197  ஏக்கர் காணி இன்றைய தினம் விடுவிக்கப்படும் என கூறப்பட்டு அக்காணி உரிமையாளர்களான சுமார் 400 குடுப்பத்தினரை இன்றைய தினம் அழைத்து வந்து இருந்தனர்.

விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட காணியில் சுமார் 75 வீதத்துக்கும் மேலாக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். விடுவிப்பதாக கூறப்பட்ட நிலப்பரப்பை சுற்றி புதிதாக முள்வேலி அமைக்கின்றனர்.

விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பு மக்களுடைய கூடுதலானவை விவசாய காணிகள் ஆகும். மக்களுடைய குடியிருப்பு காணிகளுக்குள் இன்னமும் இராணுவத்தினர் குடியிருக்கின்றனர். அவற்றை மக்களுக்கு விடுவிக்கவில்லை.

மிதிவெடிகள் இருக்கின்றன எனக்கூறி கால அவகாசத்தை பெற்றுக்கொள்ளும் இராணுவத்தினர் அந்த கால அவகாசத்தில் புதிதாக முள் வேலிகளை அமைக்கின்றார்கள்.

இவ்வாறு மக்களை ஏமாற்றும் செயற்பாடுகள் கொழும்பில் இருக்கும் புதிய ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ தெரியவாராமல் இருக்கலாம். அவர்களால் அமைக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணிக்குழு இவை தொடர்பில் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மக்கள் காணிகள் விடுவிக்கப்படும் போது செயலணி குழு நேரில் வந்து அவற்றை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அந்த செயலணி குழு நேரில் வந்து ஆராய்வது இல்லை.

மக்களை ஏமாற்றும் முயற்சிகளுக்கு இந்த புதிய அரசாங்கமும் துணை போகின்றதா என நாம் சந்தேகிக்கின்றோம். எனவே கூடிய விரைவில் இவற்றை புதிய அரசாங்கம் கவனத்தில்  நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட 1,200 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் விடுவிக்கப்படாத ஏனைய மக்களின் காணிகளும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்வரும் திங்கட்கிழமை (23) யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நாம் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டால் மக்கள் ஏமாற்றப்படும் விடயங்களை எடுத்து கூறுவோம்' என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X