2025 ஜூலை 07, திங்கட்கிழமை

புங்குடுதீவு மாணவி கொலை; மூவர் கைது

Menaka Mookandi   / 2015 மே 15 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன், நா.நவரத்தினராசா

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சகோதர்களான 3 சந்தேகநபர்கள் வியாழக்கிழமை (14) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மேற்படி மாணவி புதன்கிழமை (13) பாடசாலைக்குச் சென்ற பின்னர் வீடு திரும்பாததை அடுத்து, அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு அருகிலுள்ள பற்றைக்குள் இருந்து கைகள் கட்டப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிலையில் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் இரண்டு கால்களும் அரளி மரத்தில் கட்டிய நிலையில் வாய்க்குள் துணி அடையப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

சடலத்தை மீட்ட ஊர்காவற்றுறை பொலிஸார் யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்தனர். சடல பரிசோதனைகளில் வாய்க்குள் துணி அடைந்தமையால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு, தலை கல்லி அடிபட்டதில் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. மாணவியின் உடற்பாகம் கொழும்புக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை பொலிஸார் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரின் இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பூபாலசிங்கம் இந்திரகுமார் (வயது 40), பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 34), பூபாலசிங்கம் தவக்குமார் (வயது 32) ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் கூறினர்.

புங்குடுதீவில் இன்று வெள்ளிக்கிழமை (15) கடையடைப்பு நடைபெறுகின்றது. மாணவியின் இறுதிக் கிரியைகள்  வெள்ளிக்கிழமை (15) நடைபெறவுள்ள நிலையில்  தீவகத்துக்கான தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .